ஜனநாயக படுகொலை நடந்த இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும்; காங்கிரஸ் எம்.பி. பேட்டி


ஜனநாயக படுகொலை நடந்த இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும்; காங்கிரஸ் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 20 Sept 2020 4:12 PM IST (Updated: 20 Sept 2020 4:12 PM IST)
t-max-icont-min-icon

ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும் என காங்கிரஸ் எம்.பி. அகமது பட்டேல் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.  இந்த மசோதாக்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள், சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது எனவும் திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன.  எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை அடுத்து மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்பின்னர் அவை மீண்டும் கூடியது.  வேளாண் மசோதாக்கள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன.  எனினும் உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

இந்நிலையில், வேளாண் மசோதாக்களுக்கான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.  இவற்றில் அந்த மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே உறுப்பினர்கள் ஆதரவை பெற்று நிறைவேற்றப்பட்டன.

இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. அகமது பட்டேல் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம் ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது.  அது ஜனநாயக படுகொலைக்கு சமம்.

நாடாளுமன்ற மேலவையின் துணை தலைவர் (ஹரிவன்ஷ்) ஜனநாயக மரபுகளை பாதுகாத்திருக்க வேண்டும்.  ஆனால் அதற்கு பதிலாக, இன்றைய அவரது செயல்பாடுகள் ஜனநாயக மரபுகளுக்கும், நடைமுறைகளுக்கும் தீங்கு ஏற்படுத்தி விட்டது.  அதனால், நாங்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது என முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

இதன்படி எதிர்க்கட்சிகள் மேலவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தனர்.  காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தினை அவையில் தாக்கல் செய்துள்ளனர்.  காங்கிரஸ் எம்.பி. அகமது பட்டேல் தொடர்ந்து கூறும்பொழுது, ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட இன்றைய தினம் வரலாற்றில் கருப்பு நாளாக இருக்கும் என கூறியுள்ளார்.

Next Story