கடந்த 5 ஆண்டுகளில் 18,855 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது; மத்திய இணை மந்திரி தகவல்


கடந்த 5 ஆண்டுகளில் 18,855 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது; மத்திய இணை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 20 Sept 2020 6:41 PM IST (Updated: 20 Sept 2020 9:43 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 2015 முதல் 2019 வரையிலான 5 ஆண்டுகளில் 18,855 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது என மத்திய இணை மந்திரி மக்களவையில் இன்று தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  இதில் பல்வேறு விவகாரங்களை இரு அவை உறுப்பினர்களும் எழுப்பி வருகின்றனர்.  நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 வேளாண் மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன.  இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.  எனினும், மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இந்த சூழலில் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்விவகார துறை இணை மந்திரி நித்யானந்த ராய் இன்று பேசும்பொழுது, கடந்த 2015ம் ஆண்டில் 15 ஆயிரத்து 459 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.  தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டில் ஆயிரத்து 76 பேருக்கும், கடந்த 2017ம் ஆண்டில் 795 பேருக்கும், கடந்த 2018ம் ஆண்டில் 586 பேருக்கும், கடந்த 2019ம் ஆண்டில் 939 பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது என கூறினார்.

இதனால், கடந்த 2015 முதல் 2019 வரையிலான 5 ஆண்டுகளில் மொத்தம் 18 ஆயிரத்து 855 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது என மத்திய இணை மந்திரி தெரிவித்து உள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி  அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களில் மதம் சார்ந்த துன்புறுத்தல்களுக்கு ஆளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என குடியுரிமை திருத்த சட்டம் சார்பில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் இந்த திருத்த சட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பினை தொடர்ந்து 2015 முதல் 2019ம் ஆண்டு வரையில் நாட்டுக்குள் நுழைந்தவர்களில் 25 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டது.

Next Story