வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை - ராஜ்நாத் சிங்


வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 20 Sep 2020 2:44 PM GMT (Updated: 20 Sep 2020 2:44 PM GMT)

இன்று ஏற்பட்ட அமளியைப் போல் வரலாற்றில் இதுவரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள், சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது எனவும் திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தன. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை அடுத்து மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்பின்னர் அவை மீண்டும் கூடிய போது வேளாண் மசோதாக்கள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன. எனினும் உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதற்கிடையில், வேளாண் மசோதாக்களுக்கான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.  இவற்றில் அந்த மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே உறுப்பினர்கள் ஆதரவை பெற்று நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் இதுபற்றி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்த இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த நாள் உண்மையில் இந்திய விவசாயத்திற்கு ஒரு முக்கியமான நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்திய விவசாயத்தின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வருவது தொடர்பான இந்த முயற்சிக்காக பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மசோதாக்களின் அனைத்து அம்சங்களையும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தெளிவுடனும் உறுதியுடனும் விளக்கிய வேளாண் மந்திரிக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்”  என்று கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி கவலை அளிப்பதாகவும், வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை என்றும் தெரிவித்துள்ள அவர் அவையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது எதிர்கட்சிகளின் கடமை என்று கூறியுள்ளார்.

Next Story