கொரோனா சூழலிலும் அவைக்கு அதிக உறுப்பினர்கள் வருகின்றனர்; மக்களவை சபாநாயகர் பெருமிதம்


கொரோனா சூழலிலும் அவைக்கு அதிக உறுப்பினர்கள் வருகின்றனர்; மக்களவை சபாநாயகர் பெருமிதம்
x
தினத்தந்தி 20 Sep 2020 3:52 PM GMT (Updated: 20 Sep 2020 3:52 PM GMT)

கொரோனா பாதிப்புள்ள சூழலிலும் அவைக்கு அதிக உறுப்பினர்கள் வருகின்றனர் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பெருமிதமுடன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் முடங்கி போயுள்ளனர்.  சில தளர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியான போதிலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் இன்னும் முன்னேற்றம் எதுவும் இல்லை.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது.  இதில் இரு அவைகளிலும் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.  பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, மேலவையில் இன்று 2 வேளாண் திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன.  இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.  எனினும், இரண்டு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

கொரோனா அச்சம் ஒருபுறம் இருந்த நிலையிலும், அவைக்கு உறுப்பினர்கள் வருகை குறையவில்லை.  இதுபற்றி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறும்பொழுது, மனித குலத்திற்கு ஒரு பெரும் சவாலாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகளால் வேறுபட்ட சூழ்நிலையை நாம் எதிர்கொண்டுள்ளோம்.  நாட்டில் எப்பொழுதெல்லாம் ஒரு சிக்கல் எழுகிறதோ, நாடாளுமன்றம் ஒரு வழியை காட்டியிருக்கிறது.  இதுபோன்ற சூழலில் நடைபெறும் கூட்டத்தொடரில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

சுகாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள சூழ்நிலையிலும் கூட அதிக அளவில் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.  இது நாட்டு மக்களுக்கு நீங்கள் தரும் நல்ல செய்தி என முதல் நாளில் இருந்து நான் கூறி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Next Story