வேளாண் மசோதாக்கள் மீது மாநிலங்களவையில் விவாதம்: ‘விவசாயிகளை காப்பாற்றுவதாக கூறி அடகு வைத்து விட்டீர்கள்’ மத்திய அரசு மீது தி.மு.க. எம்.பி திருச்சி சிவா குற்றச்சாட்டு


வேளாண் மசோதாக்கள் மீது மாநிலங்களவையில் விவாதம்: ‘விவசாயிகளை காப்பாற்றுவதாக கூறி அடகு வைத்து விட்டீர்கள்’ மத்திய அரசு மீது தி.மு.க. எம்.பி திருச்சி சிவா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Sep 2020 11:14 PM GMT (Updated: 20 Sep 2020 11:14 PM GMT)

வேளாண் மசோதாக்கள் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. எம்.பி திருச்சி சிவா, விவசாயிகளை காப்பாற்றுவதாக கூறி அவர்களை மத்திய அரசு அடகு வைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய இரு மசோதாக்கள் மீது நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு திருச்சி சிவா பேசுகையில் கூறியதாவது:-

விவசாயிகளை காப்பாற்ற போவதாக இந்த மசோதாவில் சொல்லப்படுகிறது. ஆனால் இதன் மூலம் விவசாயிகள் விற்பனை செய்யப்படுவார்கள். கொரோனாவை சாக்காக வைத்துக்கொண்டு இதுபோன்ற மசோதா உள்பட பல அவசர சட்டங்களை இந்த அரசு அவசர அவசரமாக நிறைவேற்ற முயற்சிக்கிறது.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்று திருக்குறள் சொல்கிறது. ஆனால் இந்த மசோதா இந்த குறளை தலைகீழாக்கி விட்டது. விவசாயிகள் எல்லோரும் தொழுதுண்டு பின் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும்.

விவசாயிகள் மீது மத்திய அரசுக்கு திடீரென ஏன் இந்த பாசம் வந்தது என்று தெரியவில்லை. ஜந்தர்மந்தரில் அவர்கள் அரை நிர்வாணமாக போராடியபோது அவர்களை யாரும் சந்திக்கவில்லை. அவர்களது கோரிக்கை பற்றி எதுவும் கேட்கவில்லை.

இப்போது விவசாயிகளை காப்பாற்றுவதாக பேசுகிறீர்கள். விவசாயிகளை காப்பாற்றுவதாக கூறி அவர்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைத்து இருக்கிறீர்கள். இந்தியா ஒரு விவசாய நாடு என்று இல்லாமல் இனி கார்ப்பரேட் நாடு என்று அனைவராலும் அறியப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.கே.எஸ். இளங்கோவன்

மற்றொரு தி.மு.க. உறுப்பினரான டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில் கூறியதாவது:-

ஒரு சட்டம் கொண்டு வருவதற்காக மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது தவறு. விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்துவதிலும், வணிகம் புரிவதிலும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஒரு பேனா வாங்கினால் அந்த பேனாவின் அட்டையில் என்ன விலை குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த விலையை நாம் கொடுக்கிறோம். பொருளின் உற்பத்தியாளர்தான் இங்கே விலையை நிர்ணயிக்கிறார்.

ஆனால் விவசாயத்தில் மட்டும் விளைபொருட்களுக்கு விவசாயிகளால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை. வணிகர்கள்தான் விலையை நிர்ணயம் செய்கிறார்கள்.

விவசாயிகளும், இடைத்தரகர்களும், வணிகர்களும் ஒத்துப்போய் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டுமென்றால் விவசாயிகளிடம் பொருட்களை குறைந்த விலைக்குத்தான் கேட்பார்கள். விவசாயிகளுக்கு நன்மை செய்வதாக நினைத்து வியாபாரிகளுக்கு நன்மை செய்வதாக இந்த மசோதா உள்ளது. இதன் மூலம் விவசாய பொருட்களை விலைக்கு வாங்குவது போல் கடைசியாக விவசாயிகளையே விலைக்கு வாங்கிவிடுவார்கள்.

விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்க வேண்டும், மக்களுக்கும் லாபம் கிடைக்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை பற்றி சொல்லப்பட்டு உள்ளது. ஆனால் இந்த மசோதாவில் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. எனவே இந்த மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story