2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை துணைத்தலைவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்


2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்: மாநிலங்களவை துணைத்தலைவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம்
x
தினத்தந்தி 20 Sep 2020 11:50 PM GMT (Updated: 20 Sep 2020 11:50 PM GMT)

2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக, மாநிலங்களவை துணைத் தலைவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்து உள்ளன.

புதுடெல்லி,

விவசாய விளைபொருட் கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய இரு மசோதாக்களும் நேற்று மாநிலங்களவையில் குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டன.

சபையை ஒத்திவைக்க வேண்டும் என்று தாங்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டு மசோதாக்கள் நிறைவேற வழிவகுத்ததாக கூறி மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தி.மு.க., தெலுங்கானா ராஷ்டிர சமிதி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், தேசிய மாநாடு, ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 கட்சிகள் நோட்டீஸ் கொடுத்து உள்ளன.

இந்த தகவலை தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது ஜனநாயக படுகொலை என்றும், சபையை ஒத்திவைக்க வேண்டும் என்றும், டிவிஷன் வாரியாக ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மாநிலங்களவை துணைத்தலைவர் நிராகரித்ததாகவும், எனவே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீசு கொடுத்து இருப்பதாகவும் கூறினார்.

மாநிலங்களவையில் போதிய ஆதரவு இல்லை என்று தெரிந்ததால்தான் டிவிஷன் வாரியாக ஓட்டெடுப்பு நடத்த அரசு அனுமதிக்கவில்லை என்றும், இது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் துயரமான நாள் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தெரிவித்தார்.

Next Story