பாகிஸ்தானில் சீக்கிய இளம்பெண்கள் கடத்தி மதமாற்றம்; அகாலி தள தொண்டர்கள் போராட்டம்


பாகிஸ்தானில் சீக்கிய இளம்பெண்கள் கடத்தி மதமாற்றம்; அகாலி தள தொண்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2020 2:42 PM GMT (Updated: 22 Sep 2020 2:42 PM GMT)

பாகிஸ்தானில் சீக்கிய சமூகத்திற்கு எதிரான கொடுமைகளுக்கு கண்டனம் தெரிவித்து சிரோமணி அகாலி தள தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக இளம்பெண்களை கடத்தி சென்று மதமாற்றம் செய்து கட்டாய திருமணம் செய்து கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலம் ஆக கூறப்பட்டு வருகிறது.

இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாக, மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.  பாகிஸ்தானின் ஹசன் அப்துல் சிட்டியில் உள்ள வரலாற்று சிறப்பு பெற்ற பஞ்சா சாகிப் குருத்வாராவின் தலைவராக பிரீத்தம் சிங் என்பவர் இருந்து வருகிறார்.  இவரது மகள் புல்பால் கவுர் (வயது 17).

கடந்த இரு வாரங்களுக்கு முன் இவரது மகள் காணாமல் போய்விட்டார்.  இதுபற்றி டெல்லியில் உள்ள சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியிடம் தெரிவித்து உள்ளார்.  இந்த விவகாரம் பற்றி இந்திய வெளிவிவகார அமைச்சகத்திடம் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

தனது மகள் மதமாற்றம் செய்யப்பட்டு இருக்க கூடும் என பிரீத்தம் அச்சம் தெரிவித்து உள்ளார்.  இந்நிலையில், சீக்கிய கமிட்டியானது, அந்த இளம்பெண் கடத்தப்பட்டு உள்ளார் என்றும் பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு அவர் மதமாற்றம் செய்யப்பட்டு விட்டார் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

கடந்த 9 மாதங்களில் இதுபோன்று 55க்கும் மேற்பட்ட சீக்கிய இளம்பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் அந்த கமிட்டி அதிர்ச்சி தகவலை தெரிவித்தது.

சீக்கிய பெண்களை மதமாற்றம் செய்யும் இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரகம் முன் சீக்கியர்கள் பலர் ஒன்று திரண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தின்போது, அவுரங்கசீப் மாநிலம் போன்று பாகிஸ்தான் உள்ளது.  இந்த விவகாரம் ஐ.நா.வுக்கு கொண்டு செல்லப்படும் என டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டியின் தலைவர் எம்.எஸ். சிர்சா கூறினார்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தானில் சீக்கிய சமூகத்திற்கு எதிராக நடந்து வரும் கொடுமைகளுக்கு கண்டனம் தெரிவித்து சிரோமணி அகாலி தள கட்சியின் தொண்டர்கள் டெல்லி தீன் மூர்த்தி பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இதுபற்றி போராட்டக்காரர்களில் ஒருவர் கூறும்பொழுது, எங்களுடைய சிறுமிகள் பலர் கடத்தப்பட்டு இருக்கின்றனர்.  அவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றமும் செய்துள்ளனர்.  அவர்களை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்.  அதற்காகவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என கூறினார்.

Next Story