ஆந்திராவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக இசை பல்கலைக்கழகம் - மாநில அரசுக்கு சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்


ஆந்திராவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக இசை பல்கலைக்கழகம் - மாநில அரசுக்கு சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Sep 2020 9:47 AM GMT (Updated: 28 Sep 2020 9:47 AM GMT)

ஆந்திராவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜயவாடா,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 25-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் பிறந்த இடமான ஆந்திராவின் நெல்லூரில் எஸ்.பி.பி. நினைவாக இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தனது சிறந்த பங்களிப்புகளால் உலக அளவில் தெலுங்கு மக்களை பெருமைப்படுத்தி உள்ளார். எனவே அவரது நினைவாக நெல்லூர் நகரில் இசை பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து, அதில் அவரது வெண்கல சிலையும் நிறுவ வேண்டும். ஒரு சங்கீத கலாகேந்திராவை நிறுவி எஸ்.பி.பி.யின் நினைவலைகளை பாதுகாக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டு உள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் எனவும், அவரது பெயரில் தேசிய விருது ஒன்றை நிறுவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ள சந்திரபாபு நாயுடு, இந்த நடவடிக்கைகளால் மாநிலத்தில் இசையும், கவின் கலைகளும் வளரும் எனவும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story