60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது


60 லட்சத்தை தாண்டிய பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவை வென்றவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 28 Sep 2020 11:16 PM GMT (Updated: 28 Sep 2020 11:47 PM GMT)

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்து விட்ட நிலையில், தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 50 லட்சத்தை தாண்டியுள்ளது.

புதுடெல்லி,

பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவும் கொரோனா தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில பத்தாயிரங்களில் உள்ளது. தினமும் நிகழும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, நாடு முழுவதும் தொற்றில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தவாறே இருக்கிறது. தீவிர பரிசோதனை, வேகமான கண்டறிதல், தரமான சிகிச்சை போன்ற தாரக மந்திரத்தை இந்தியா பின்பற்றி வருவதால் இந்த குணமடைதல் சாத்தியமாகி இருக்கிறது.

அந்த வகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 74,893 பேர் புதிதாக தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 16 ஆயிரத்து 520 ஆக உயர்ந்திருக்கிறது. இது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

தற்போதைய நிலையில் 9 லட்சத்து 62 ஆயிரத்து 640 பேர் மட்டுமே வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சையில் உள்ளனர். அந்த வகையில் சிகிச்சையில் இருப்போரை விட 5 மடங்குக்கு அதிகமான குணமடைந்தவர் எண்ணிக்கையை இந்தியா பெற்றிருக்கிறது.

குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரே மாதத்தில் சுமார் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. மொத்தத்தில் இந்தியாவின் குணமடைந்தோர் விகிதம் 82.58 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதே நேரம் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த தேசிய சராசரியை விட அதிக குணமடைந்தோரை பெற்றுள்ளன.

புதிதாக குணமடைந்தவர்களில் 73 சதவீதத்தினர் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 13 ஆயிரத்துக்கு அதிகமானோர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.

இதைப்போல குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையிலும் மராட்டிய மாநிலமே முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிக குணமடைந்தவர் எண்ணிக்கையை பெற்றுள்ளன.

இந்த நிலையில் மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 82 ஆயிரத்து 170 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்து 74 ஆயிரத்து 702 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களில் 79 சதவீதம் பேர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதிலும் மராட்டியம் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய நோயாளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக 9 ஆயிரத்துக்கு அதிகமான பாதிக்கப்பட்டவர்களுடன் கர்நாடகம் 2-ம் இடத்தை பெற்றிருக்கிறது.

இதற்கிடையே கொரோனா பாதித்த மேலும் 1,039 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 542 ஆகியிருக்கிறது. எனினும் இந்தியாவின் கொரோனா பலி விகிதம் 1.57 சதவீதமாகவே உள்ளது. மேலும் சிகிச்சை பெறுவோர் விகிதமும் 15.85 சதவீதமாக இருக்கிறது.

விடுமுறை தினமான நேற்று முன்தினம் நாடு முழுவதும் 7 லட்சத்து 9 ஆயிரத்து 394 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை வரை நடந்துள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 7 கோடியே 19 லட்சத்து 67 ஆயிரத்து 230 ஆகும்.

இந்திய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடாக அமெரிக்காவும், அதைத் தொடர்ந்து இந்தியாவும், பிரேசிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story