பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு; அத்வானி, ஜோஷி நேரில் ஆஜராக விலக்கு


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு; அத்வானி, ஜோஷி நேரில் ஆஜராக விலக்கு
x
தினத்தந்தி 29 Sep 2020 8:23 PM GMT (Updated: 29 Sep 2020 8:23 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் அத்வானி, ஜோஷி நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

லக்னோ,

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண்சிங் உள்பட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லக்னோ சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்த இவ்வழக்கில், இம்மாத தொடக்கத்தில் விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிபதி எஸ்.கே.யாதவ், இவ்வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறார். காலை 10 மணிக்கு அவர் தீர்ப்பை வாசிக்க தொடங்குகிறார். பாபர் மசூதியை இடிக்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கிலும் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி எஸ்.கே.யாதவ் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். ஆனால், வயது காரணமாக, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக வக்கீல்கள் தெரிவித்தனர். இருப்பினும், தீர்ப்பு வாசிக்கப்படும்போது, அவர்களின் வீடுகளில் போலீசார் இருப்பார்கள். உமா பாரதி, கல்யாண்சிங் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாலும், வேறு சிலர் உடல்நல குறைவால் அவதிப்படுவதாலும் அவர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜர் ஆவார்கள்.

இந்த தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அயோத்தியிலும், லக்னோ சி.பி.ஐ. கோர்ட்டிலும் விசேஷ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story