பரிசோதனை செய்யாமலேயே ‘கொரோனா இல்லை’ என சான்றளித்து முறைகேடு; கேரள பரிசோதனைக்கூட நிர்வாகி கைது


பரிசோதனை செய்யாமலேயே ‘கொரோனா இல்லை’ என சான்றளித்து முறைகேடு; கேரள பரிசோதனைக்கூட நிர்வாகி கைது
x
தினத்தந்தி 29 Sep 2020 9:37 PM GMT (Updated: 29 Sep 2020 9:37 PM GMT)

கேரளாவில் பரிசோதனை செய்யாமலேயே ‘கொரோனா இல்லை’ என சான்றளித்து முறைகேட்டில் ஈடுபட்ட பரிசோதனைக்கூட நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

மலப்புரம்,

கேரளாவின் கோழிக்கோட்டில் இயங்கி வரும் மைக்ரோ லேப் என்ற பரிசோதனைக்கூடம், கொரோனா பரிசோதனைக்கான உரிமம் பெற்றுள்ளது. இந்த பரிசோதனைக்கூடத்தின் கீழ் மலப்புரத்தில் இயங்கி வரும் அர்மா லேப், கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களின் சளி மாதிரியை சேகரித்து மைக்ரோ லேபுக்கு அனுப்பும் பணியை செய்து வந்தது. இந்த மாதிரிகள் மைக்ரோ லேபில் பரிசோதிக்கப்பட்டு அவர்களது லேப் முகவரியுடன் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இந்த அர்மா லேப் மூலம் சளி மாதிரி கொடுத்திருந்த ஒருவருக்கு, கொரோனா இல்லை என சான்றளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அரசு சுகாதாரத்துறையில் பரிசோதித்தபோது அவருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது.

அவரது புகாரின் பேரில் அர்மா லேபில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சளி மாதிரியை பரிசோதிக்காமலேயே தொற்று இல்லை என போலியாக சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக மைக்ரோ லேப் பெயரில் போலியாக சான்றிதழ்கள், ரப்பர் ஸ்டாம்புகளையும் அவர்கள் தயாரித்து வைத்துள்ளனர். இதன் மூலம் ரூ.45 லட்சம் வரை மோசடி செய்திருப்பது அம்பலமாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து அர்மா லேப் மேலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அதன் உரிமையாளர் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Next Story