பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்; மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்; மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Sep 2020 10:45 PM GMT (Updated: 29 Sep 2020 9:48 PM GMT)

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க உத்தரவிடவேண்டும் என்று கோரி தர்பார் மகிளா சமன்வாயா குழு என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, சட்டப்பணிகள் ஆணையம் ஆகியவற்றால் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு அனைத்து மாநிலங்களும் குடும்ப அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, அடையாள அட்டை எதுவும் கேட்டு அவர்களை வற்புறுத்தக்கூடாது என்றும் கூறினார்கள்.

அத்துடன், எத்தனை பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன என்பது பற்றிய அறிக்கையை 4 வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Next Story