உ.பி.யில் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் பலி; குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரியங்கா கோரிக்கை


உ.பி.யில் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண் பலி; குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரியங்கா கோரிக்கை
x
தினத்தந்தி 29 Sep 2020 10:26 PM GMT (Updated: 29 Sep 2020 10:26 PM GMT)

உ.பி.யில் 15 நாட்களுக்கு முன் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு, படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்தார். இதில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர், 19 வயது தாழ்த்தப்பட்ட இன பெண். இவர், கடந்த 14-ந் தேதி தனது தாயுடன் வயலுக்கு சென்றபோது மாயமானார். பின்னர் அவர் நாக்கு வெட்டப்பட்டு, படுகாயங்களுடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 4 பேரை கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டதும், கழுத்தை நெரித்து கொல்ல முயற்சிக்கப்பட்டதும் பின்னர் தெரிய வந்தது. இந்த வழக்கில் முதலில் சந்தீப் (20) என்ற வாலிபர் அதே நாளில் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண், மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் தான் கும்பல் கற்பழிப்புக்கு ஆளானதாகவும், சந்தீப் தவிர ராமு, லவ்குஷ், ரவி ஆகியோரும் தன்னை கற்பழித்ததாகவும், தடுக்க முயற்சித்தபோது தன்னை அவர்கள் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாகவும், அப்போது தனது நாக்கு வெட்டப்பட்டு விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

மறுநாளில் அந்த பெண் அலிகாரில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அந்த பெண்ணின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து அவர் கடந்த திங்கட்கிழமை டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணிக்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

பிரியங்கா காந்தி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ஹத்ராஸ், ஷாஜகான்பூர், கோரக்பூர் என ஒன்றன்பின் ஒன்றாக கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து மாநிலத்தை உலுக்கி உள்ளது. உ.பி.யில் சட்டம்-ஒழுங்கு பெருமளவில் மோசம் அடைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குற்றவாளிகள் வெளிப்படையாக குற்றங்களை செய்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இனப்பெண்ணை கற்பழித்து கொன்றவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்” என கூறி உள்ளார்.

மேலும், “முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உ.பி.யில் பெண்கள் பாதுகாப்புக்கு பதில் கூற வேண்டும்” எனவும் கூறி உள்ளார்.

Next Story