கட்டுப்பாட்டு பகுதிகளில் 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு 15-ந்தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது


கட்டுப்பாட்டு பகுதிகளில் 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு 15-ந்தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது
x
தினத்தந்தி 1 Oct 2020 5:27 AM IST (Updated: 1 Oct 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

கட்டுப்பாட்டு பகுதிகளில் வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

புதுடெல்லி,

கட்டுப்பாட்டு பகுதிகளில் வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 15-ந்தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என்பது உள்ளிட்ட 5-ம் கட்ட தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் தடுப்பதற்காக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி ஊரடங்கை அமல்படுத்தியது. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு செப்டம்பர் 30-ந்தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கை அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் இரண்டையும் கருத்தில் கொண்டு, 4 கட்ட தளர்வுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இந்த நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே பின்பற்றுவதற்கான 5-வது கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பள்ளிகள், பயிற்சி நிறுவனங்களை மீண்டும் படிப்படியாக திறப்பது குறித்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் அக்டோபர் 15-ந்தேதிக்கு பின்னர் முடிவு எடுக்கலாம்.

* ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்கலாம். பெற்றோரின் எழுத்துப்பூர்வமான சம்மதத்தின்பேரில், மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கலாம். வருகைப்பதிவு கட்டாயம் இல்லை.

* பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் திறக்கிறபோது பின்பற்ற வேண்டிய சுகாதார, பாதுகாப்பு முன் எச்சரிக்கைகள் குறித்து மாநிலங்கள் அவர்களாகவே செயல்பாட்டு விதிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்தலாம். பள்ளிகள் அவற்றை கட்டயமாக பின்பற்ற வேண்டும்.

* கல்லூரிகளையும், உயர் கல்வி நிறுவனங்களையும் திறப்பது பற்றி நிலைமைக்கேற்ப உயர்கல்வித்துறை, கல்வித்துறை அமைச்சகம் ஆகியவை மத்திய உள்துறை அமைச்சகத்துடன் கலந்து பேசி முடிவு எடுக்கலாம். ஆன்லைன், தொலைதூரக்கல்வி முறை தொடரலாம். அவற்றை ஊக்குவிக்கலாம்.

* ஆராய்ச்சி படிப்பு (பி.எச்.டி.) மாணவர்களும், முதுநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களும் ஆய்வுக்கூடம் மற்றும் பரிசோதனைப்பணிகளில் ஈடுபட வேண்டி உள்ளது. எனவே இவற்றுக்கான உயர் கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 15-ந்தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், கண்காட்சிகள்...


* வீரர்களுக்கு பயிற்சி அளிக் கக்கூடிய நீச்சல் குளங்கள் 15-ந்தேதிக்கு பிறகு திறக்கலாம். இதற்கான செயல்பாட்டு விதிமுறைகளை மத்திய இளைஞர்கள் விவகாரம், விளையாட்டு அமைச்சகம் வழங்கும்.

* சினிமா தியேட்டர்கள், பன்னடுக்கு திரையரங்குகள் (மல்டிபிளக்ஸ்) 50 சதவீத இருக்கைகளுடன் அக்டோபர் 15-ந்தேதியில் இருந்து திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான செயல்பாட்டு விதிமுறைகளை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வழங்கும்.

* பொழுதுபோக்கு பூங்காக்கள் அக்டோபர் 15-ந்தேதியில் இருந்து திறக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கான செயல்பாட்டு விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கும்.

* வர்த்தக கண்காட்சிகள் (பி2பி) அக்டோபர் 15-ந்தேதி முதல் திறக்கலாம். வர்த்தக அமைச்சகம் இதற்கான செயல்பாட்டு விதிமுறைகளை வகுத்து அளிக்கும்.

* சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், மத, அரசியல் நிகழ்வுகள் 100 பேருடன் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. 100 பேருக்கு மேற்பட்டோருடன் இவற்றை நடத்த இப்போது அனுமதிக்கப்படுகிறது. மூடப்பட்ட இடங்களில் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். அதிகபட்சம் 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும். முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பின்பற்றுதல், வெப்ப பரிசோதனை செய்தல், கைகழுவும் சானிடைசர் வழங்குதல் கட்டாயம். திறந்தவெளிகளில் நடத்துகிறபோது, தனிமனித இடைவெளி பின்பற்றுவதும், முக கவசம் அணிவதும், வெப்ப பரிசோதனை செய்வதும், கைகழுவும் சானிடைசர் வழங்குவதும் கட்டாயம். இதில் மாநில அரசுகள் செயல்பாட்டு விதிமுறைகளை வழங்கும்.

எதெல்லாம் கூடாது?


* கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ளூர் ஊரடங்கை, மத்திய அரசை கலந்து ஆலோசிக்காமல் அமல்படுத்தக்கூடாது.

* மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்து கட்டுப்பாடு கூடாது. அனுமதி, ஒப்புதல், இ பெர்மிட் தேவையில்லை.

* 65 வயதுக்கு மேற்பட்டோர், நாள்பட்ட வியாதிகளை உடையவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அத்தியாவசியமான சூழலிலும், உடல்நல காரணங்களையும் தவிர்த்து வெளியே செல்ல வேண்டாம். வீடுகளில் இருக்க வேண்டும்.

* தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படியான வழிமுறைகளை மாநில அரசுகள் நீர்த்து போகச்செய்யக்கூடாது.

* தனி மனித இடைவெளியை பின்பற்ற செய்வதற்காக குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story