ஹத்ராஸ் சம்பவம்: உபி: குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன் - ஸ்மிருதி இரானி


ஹத்ராஸ் சம்பவம்: உபி: குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என நம்புகிறேன் - ஸ்மிருதி இரானி
x
தினத்தந்தி 1 Oct 2020 2:32 PM IST (Updated: 1 Oct 2020 2:32 PM IST)
t-max-icont-min-icon

ஹத்ராஸ் பெண்ணின் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் விரைவில் விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியல் இன இளம்பெண், கடந்த மாதம் 14-ந் தேதி அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அக்கிராமத்தை சேர்ந்த உயர் ஜாதி இளைஞர்கள் 4 பேர், அந்த பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது, பெண்ணை கடுமையாக தாக்கினர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, நாக்கையும் அறுத்ததாக தெரிகிறது.

பலத்த காயங்களுடன் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு, ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் தாக்கியதில், அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கி இருப்பதும், பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, டெல்லியிலும், உத்தரபிரதேசத்திலும் போராட்டங்கள் வெடித்தன. அரசியல்வாதிகள், திரையுலகினர், விளையாட்டு துறையினர் என பல்வேறு தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குழந்தைகள் மற்றும் ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இரானி ஹத்ராஸ் பெண்ணின் கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து எகனாமிக் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தேசிய பெண்கள் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், மருத்துவமனைக்குச் சென்று விசாரித்ததுடன், இறந்த பெண்ணின் குடும்பத்துடனும் பேசினேன். இந்த வழக்கில் விரைவில் நீதி கிடைக்கவேண்டும் என நானே தனிப்பட்ட முறையில் உத்தரபிரதேச முதல்-மந்த்ரி மற்றும் உள்துறை மந்திரியுடன் இதுகுறித்து ஆலோசனை செய்தோம். மாநில அரசால் சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதல்-மந்திரி உறுதியளித்துள்ளார். அது தூக்குதண்டையாக இருக்கும் என நான் நம்புகிறேன். சீக்கிரத்தில் நீதிகிடைக்கும் என்பதை நான் உறுதிபடுத்துகிறேன்.

மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தங்களையும் கொண்டுவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அமைத்துத்தர தேசிய பெண்கள் ஆணையமும் வழிவகை செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற குற்றங்களை தடுக்க உள்துறை மந்திரியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளேன்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து கண்காணிக்கும் வகையில், ஊரடங்கு காலத்திலும் அதிகாரிகள் செயல்பட்டுவருகிறார்கள். பெண்கள் பிரச்சினை அரசியல் பிரச்சினை கிடையாது. இது நாடுசார்ந்த பிரச்சினை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண்ணின் கூட்டு பாலியல் வன்கொடுமை மரணத்தைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story