ஹத்ராஸ் பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் போராட்டம்


ஹத்ராஸ் பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் போராட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2020 4:49 PM IST (Updated: 1 Oct 2020 4:49 PM IST)
t-max-icont-min-icon

ஹத்ராஸ் பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

கொல்கத்தா,

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் 19 வயதான பட்டியல் இன இளம்பெண், பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலையும் போலீசாரை எரித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

இதனிடையே ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் காரில் சென்றனர். அவர்கள் சென்ற கார் டெல்லி-நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆனால் போலீசாரின் தடையை மீறி ராகுல் காந்தி சாலையில் நடந்து சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். போலீசார் தடையை மீற முயன்றபோது, ஒருகட்டத்தில் ராகுல் காந்தியை போலீசார் இழுத்து பிடித்து கீழே தள்ளிவிட்டனர். இதில் நிலைதடுமாறி மண்சாலையில் ராகுல் காந்தி விழுந்தார்.

பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் உதவியுடன் ராகுல் காந்தி தரையில் இருந்து தூக்கப்பட்டார். அவரது காயங்களை கண்டு பிரியங்கா காந்தி பதறினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ராகுலுடன் வந்த காங்கிரஸ் தொண்டர்கள் உச்சகட்ட கொந்தளிப்பில் உள்ளனர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ராகுலை கீழே தள்ளிவிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Next Story