இந்தியாவில் கொரோனா யாரால் அதிகம் பரவுகிறது? ஆய்வில் தகவல்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று யாரால் அதிகளவில் பரவுகிறது என்ற தகவல், ஒரு ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் பற்றி தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ’சயின்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* தமிழகம், ஆந்திராவில் 5.75 லட்சம் பேரில், கொரோனா பாதிப்பு உறுதியான 84 ஆயிரத்து 965 பேரை ஆராய்ந்து, கொரோனா தொற்று பரவும் முறை மதிப்பிடப்பட்டது.
* இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளான 70 சதவீதத்திற்கும் அதிகமானோர், தங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கு கொரோனாவை பரப்புவதில்லை.
* கொரோனா பாதித்த 8 சதவீதம்பேர் மட்டுமே, நாட்டில் புதிதாக 60 சதவீதம் பேருக்கு கொரோனா பரவ காரணமாகி இருக்கிறார்கள்.
* நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரும், இறப்போரும் அதிகபட்சமாக 40-69 வயதினராக உள்ளனர். இது அதிக வருமானம் உள்ள நாடுகளை காட்டிலும் அதிகளவில் உள்ளது.
* 65 வயதுக்கு மேற்பட்டவர்களை காட்டிலும், 14 வயது வரையுள்ளவர்கள் மற்றும் பெரியவர்கள் அதிகளவில் தொடர்பில் உள்ள சம வயதினருக்கு தொற்றை பரப்புகின்றனர்.
* பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்புவிகிதம், 5-17 வயதினரிடையே 0.05 சதவீதமாக உள்ளது. இதுவே 85 வயது கடந்தவர்களிடையே 16.6 சதவீதமாக உள்ளது.
* 2 மாநிலங்களிலும், கொரோனா நோயாளிகள் இறப்புக்கு முன்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து 5 நாட்கள் தங்கி உள்ளனர். அமெரிக்காவில் இது 13 நாட்களாக உள்ளது.
* தமிழகம், ஆந்திராவில் கொரோனாவில் இறந்தவர்களில் 63 சதவீதம் பேர் குறைந்தது ஒரு நாள்பட்ட நோயை கொண்டிருந்தனர். 36 சதவீதம் பேர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை சுகாதார பிரச்சினைகளை கொண்டுள்ளனர்.
* கொரோனாவால் இறந்தவர்களில் 45 சதவீதத்தினர் நீரிழிவு நோய் தாக்கியவர்கள்.
இதையொட்டி, டெல்லியில் உள்ள நோய் இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை மையத்தை சேர்ந்த விஞ்ஞானி ரமணன் லட்சுமி நாராயண் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கூறும்போது, “இந்த கண்டுபிடிப்புகள் கொரோனா அதிகம் பாதித்த குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாட்டில் தொற்றுநோயின் பாதையை காட்டுகின்றன” என்கின்றனர்.
Related Tags :
Next Story