உ.பி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் மக்கள் கோபம்- டெல்லி இந்தியாகேட் பகுதியில் கூட்டம் தடை விதிப்பு
ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 14-ந்தேதி அங்குள்ள வயல்வெளியில் புல் அறுத்துக்கொண்டு இருந்தார். அப்போது அவரை உயர் சாதியை சேர்ந்த 4 இளைஞர்கள் வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று, கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர். . அது மட்டுமின்றி, அந்த பெண்ணை பயங்கரமாக தாக்கிய அவர்கள், நடந்த சம்பவத்தை வெளியில் கூறாமல் இருக்க அவரது நாக்கையும் அறுத்ததாக தெரிகிறது.
கொடூரமான இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளம்பெண் முதலில் உள்ளூர் மருத்துவமனையிலும், பின்னர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் தாக்கியதில் இளம்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கியதுடன், பல இடங்களில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருந்தன. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, கடந்த 29-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த நிர்பயா பாலியல் வன்கொடுமைசம்பவத்தை போல நாடு முழுவதும் உலுக்கியிருக்கும் இந்த சம்பவத்தை கண்டித்து உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஒப்புதல் இன்றி நேற்று முன்தினம் அதிகாலையில் போலீசாரே அவசரம் அவசரமாக தகனம் செய்து விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருப்பதாக அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் கொந்தளிப்பை பகிர்ந்து வருகின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்தனர்.
இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்தால் மாநில அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இளம்பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் விரைவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்கள் இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது. குறிப்பாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மைதான பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பேரிடர் மேலாண்மை அதிகாரத்தின் படி கடந்த செப்டம்பர் 3 முதல் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானம் பகுதியில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், 100 பேர் கூட்டமாக கூட வேண்டுமானாலும் உரிய முன் அனுமதி என டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியா கேட் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூடக்கூடாது என டெல்லி போலீஸ் தரப்பில் தெர்விக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தின்போது ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story