இந்தியாவில் 12 நாட்களில் 10 லட்சம் பேர் கொரோனாவை வென்று சாதனை


இந்தியாவில் 12 நாட்களில் 10 லட்சம் பேர் கொரோனாவை வென்று சாதனை
x
தினத்தந்தி 2 Oct 2020 10:15 PM GMT (Updated: 2 Oct 2020 7:28 PM GMT)

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், கடந்த 12 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்து சாதித்து உள்ளனர்.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் 3½ கோடியை எட்டும் பாதிப்புகள், 10 லட்சத்தை கடந்த மரணங்கள் என இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொடூரமாக உருவெடுத்து இருக்கும் கொரோனா, மனித குலத்துக்கு மாபெரும் சவாலாக உருவாகி இருக்கிறது. இந்த சவாலை வெற்றி கொள்ள முடியாமல் சர்வதேச நாடுகளும் திகைத்துதான் போயிருக்கின்றன. இதை பயன்படுத்தி கொரோனாவின் தீவிரம் வலுவடைந்து வருகிறது.

இந்த கொடிய வைரசின் பாதிப்புகளுக்கு இந்தியாவும் அதிக விலை கொடுத்து வருகிறது. இங்கும் தினமும் சிலப்பல பத்தாயிரங்களில் பாதிப்பும், ஆயிரத்தை கடந்து நிற்கும் மரணங்களும் நாட்டையே அதிர்ச்சியில்தான் வைத்திருக்கின்றன. எனவே தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றன.

இதன் விளைவாக தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 78 ஆயிரத்து 877 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்து 52 ஆயிரத்து 78 ஆகி இருக்கிறது.

இதில் கடந்த 12 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேர் கொரோனாவை வென்றுள்ளனர். இது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. நாட்டின் மொத்த பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 83.70 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. உலக அளவில் அதிகம் பேர் குணமடைந்த நாடாக இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 217 பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கின்றனர். இது 14.74 சதவீதம் ஆகும். அந்தவகையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 11-வது நாளாக 10 லட்சத்துக்கு குறைவாகவே நீடிக்கிறது.

சிகிச்சை பெறுவோரில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோரும், கர்நாடகாவில் 1 லட்சத்துக்கு அதிகமானோரும் உள்ளனர். அதேநேரம் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5 ஆயிரத்துக்கும் குறைவான நோயாளிகளே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கிடையே மேற்படி 24 மணி நேரத்தில் புதிதாக 81 ஆயிரத்து 484 பேர் கொரோனாவிடம் சிக்கி உள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 63 லட்சத்து 94 ஆயிரத்து 68 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 78 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், டெலலி மற்றும் சத்தீஸ்கார் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதிலும் 16 ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய பாதிப்புகளை கொண்டு மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக கர்நாடகா, கேரளாவில் முறையே 10 ஆயிரம், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் உருவாகி இருக்கின்றனர். புதிதாக குணமடைந்தவர்களிலும் மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,095 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் நாட்டில் இதுவரை 99 ஆயிரத்து 773 பேர் கொரோனாவால் மாண்டுள்ளனர். இந்த பட்டியலிலும் மராட்டியமே முதலிடத்தில் (394 பேர் சாவு) இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் மட்டும் 10 லட்சத்து 97 ஆயிரத்து 947 கொரோனா பரிசோதனைகள் நடந்து உள்ளன. அந்தவகையில் நேற்று முன்தினம் வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 7 கோடியே 67 லட்சத்து 17 ஆயிரத்து 728 ஆகும்.  மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

Next Story