உத்தரபிரதேசத்தில் கற்பழித்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் சாவுக்கு நீதி கேட்டு டெல்லியில் போராட்டம்
உத்தரபிரதேசத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணின் சாவுக்கு நீதி கேட்டு டெல்லி ஜந்தர்மந்தரில் மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர் என நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கடந்த மாதம் 14-ந்தேதி வலுக்கட்டாயமாக கற்பழிக்கப்பட்டார். இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அந்த காமக்கொடூரர்கள் இளம்பெண்ணை பயங்கரமாக தாக்கியதுடன், சம்பவம் குறித்து வெளியில் கூறாமல் இருக்க அவரது நாவையும் துண்டித்ததாக தெரிகிறது.
இந்த கொடூர சம்பவத்தில் படுகாயமடைந்த இளம்பெண் கடந்த 29-ந்தேதி டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலையும் குடும்பத்தினரின் ஒப்புதல் இன்றி போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக இளம்பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கற்பழிப்பு மற்றும் கொலையில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்து உள்ளது.
இந்த கற்பழிப்பு மற்றும் கொலை தொடர்பாக உத்தரபிரதேச அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மாநிலத்தில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்களை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணின் சாவுக்கு நீதி கேட்டு நேற்று மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர் என டெல்லி ஜந்தர்மந்தரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசையும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மிகவும் தீவிரமாக நடந்த இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், நடிகை ஸ்வரா பாஸ்கர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் சீதாராம் யெச்சூரி பேசும்போது, ‘இந்த கொடூர குற்றம் தொடர்பாக மத்திய அரசின் மவுனமும், பா.ஜனதாவின் உயர் தலைமை அதன் பின்னர் உத்தரபிரதேச அரசின் பதிலும், சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயக விரோத போக்கும் ஆளுங்கட்சியின் முகம், நடை, தன்மை மற்றும் சிந்தனையையும் காட்டுகிறது. உத்தரபிரதேச அரசு பதவியில் நீடிக்க உரிமை இல்லை. நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்’ என்று தெரிவித்தார்.
பிருந்தா காரத் கூறுகையில், ‘உயிரிழந்த இளம்பெண்ணின் வாக்குமூலத்தின் முதன்மைக்காக நாங்கள் போராடினோம். ஆனால் தற்போது குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக, இளம்பெண் கற்பழிக்கப்படவில்லை என புதிய தகவலை கூறுகின்றனர். இதுதான் உங்கள் கலாசாரமா? என மோடிஜியை கேட்க விரும்புகிறேன். உங்கள் உத்தரபிரதேச அரசு இளம்பெண்ணின் குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்துள்ளது. நீங்கள் பாதிக்கப்பட்டவர்களைத்தான் தண்டிக்கிறீர்கள்’ என்று குற்றம் சாட்டினார்.
ஜந்தர்மந்தரில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக போலீசாருடன் இணைந்து துணை ராணுவமும் குவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தடுப்பு வேலிகளை அமைத்து போராட்டக்காரர்கள் முன்னேறாமல் தடுத்து வருகின்றனர்.
ஹத்ராஸ் சம்பவத்துக்கு நீதி கேட்டு நடந்து வரும் இந்த போராட்டத்தால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story