போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் ஹத்ராஸ் செல்ல ராகுல் காந்தி முடிவு


போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் ஹத்ராஸ் செல்ல ராகுல் காந்தி முடிவு
x
தினத்தந்தி 3 Oct 2020 10:19 AM IST (Updated: 3 Oct 2020 10:19 AM IST)
t-max-icont-min-icon

ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான ஒரு தலித் இளம்பெண், சமீபத்தில் உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால்  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டார். அவரது உடலையும் போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் வெடித்தன. தேசிய தலைநகரில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். 

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ராகுல் காந்தி மீண்டும் இன்று பிற்பகல் ஹத்ராஸ் செல்ல  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 40- முதல் 50 காங்கிரஸ் எம்.பிக்களுடன் ராகுல் காந்தி ஹத்ராஸ் செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிரியங்கா காந்தியும் செல்ல இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.  அதேபோல், சமாஜ்வாடி கட்சித்தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும் ஹத்ராஸ் செல்ல முடிவு செய்துள்ளார்.  


Next Story