யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்; அநீதியான செயலுக்கும் தலைவணங்க மாட்டேன்- ராகுல்காந்தி
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதிக்கு ராகுல் காந்தி மீண்டும் செல்கிறார். ஏற்கனவே ஹத்ராஸ் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் மீண்டும் பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான ஒரு தலித் இளம்பெண், சமீபத்தில் உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலையும் போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.
இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரிய போராட்டங்கள் வெடித்தன. தேசிய தலைநகரில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ராகுல் கீழே விழுந்தார். போலீஸார் தாக்கியதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக ராகுல் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான நேற்று அவரது கருத்தை நினைவுகூரும் வகையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த உலகத்தில் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். எந்த ஒரு அநீதியான செயலுக்கும் தலைவணங்க மாட்டேன். உண்மையின் சக்தியைக் கொண்டு பொய்யை தோற்கடிப்பேன். பொய்க்கு எதிரான போரில் அனைத்து தடைகளையும் எதிர்கொள்வேன். காந்தி பிறந்த நாளில் இதயபூர்வமான வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதிக்கு ராகுல் காந்தி மீண்டும் செல்கிறார். ஏற்கனவே ஹத்ராஸ் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் மீண்டும் பயணம் மேற்கொள்கிறார்.
Related Tags :
Next Story