இந்தியாவில் ரஷிய தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனை அனுமதி கேட்டு விண்ணப்பம்


இந்தியாவில் ரஷிய தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனை அனுமதி கேட்டு விண்ணப்பம்
x
தினத்தந்தி 3 Oct 2020 10:15 PM GMT (Updated: 3 Oct 2020 8:21 PM GMT)

இந்தியாவில் ரஷிய தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 3-ம் கட்ட பரிசோதனையை நடத்துவதற்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கேட்டு டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசியை ரஷியா உருவாக்கி உள்ளது. ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனமும் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-வி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அடினோ வைரல் வெக்டர் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, செயல்திறன் மிக்கது என ஆரம்ப கட்ட சோதனைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இந்த தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தவும், தடுப்பூசியை வினியோகிக்கவும் ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புகழ்பெற்ற டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் மருந்து நிறுவனம் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்தது.

இந்தியாவில் ஒழுங்குமுறை அனுமதி கிடைத்ததும், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிசுக்கு ரஷிய நேரடி முதலீட்டு நிதியம், 10 கோடி தடுப்பூசி ‘டோஸ்’களை வினியோகம் செய்யும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்துவதற்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியை கேட்டு டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டிரிஸ் விண்ணப்பித்துள்ளது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக அதன் தொழில்நுட்ப மதிப்பீட்டை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொள்ளும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனை ஏற்கனவே ரஷியாவில் கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மத்தியில் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூட்டாக சேர்ந்து ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியையும், ஜைடஸ் கேடிலா நிறுவனம் ‘ஜைகோவ்-டி’ என்ற தடுப்பூசியையும் உருவாக்கி அவற்றின் 2-வது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தி வருகின்றன.

இதே போன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்க புனே இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் உரிமம் பெற்றுள்ளது. அந்த தடுப்பூசியின் 2, 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையும் இந்தியாவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story