கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஜார்கண்ட் மந்திரி பலி


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஜார்கண்ட் மந்திரி பலி
x
தினத்தந்தி 4 Oct 2020 1:55 AM IST (Updated: 4 Oct 2020 1:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜார்கண்ட் மாநில மந்திரி ஹாஜி ஹுசைன் அன்சாரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

ராஞ்சி,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா, மக்கள் பிரதிநிதிகளையும், பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை பலர் பாதிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சிலர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதற்கிடையே ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாக இருந்த ஹாஜி ஹுசைன் அன்சாரிக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மேதாந்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் கொரோனாவில் இருந்து மீண்டதாக கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

கொரோனாவில் இருந்து மெல்லமெல்ல மீண்டு வந்த மந்திரியின் உடல்நிலை திடீரென கவலைக்கிடமானது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மந்திரி திடீரென உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிர்இழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த இவர், மாநில ஹஜ் கமிட்டி தலைவராகவும் இருந்தவர்.

மந்திரியின் மறைவுக்கு, மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இரங்கல் செய்தியில், ‘மந்திரி இறந்த தகவல் அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். கட்சி வளர்ச்சிக்கும், மாநில நலனுக்காகவும் அவர் மிகவும் பாடுபட்டவர். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

ஜார்கண்ட்டின் மதுபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஹாஜி ஹுசைன் அன்சாரி தொடர்ந்து 4 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story