உத்தரபிரதேசத்தில் கற்பழித்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல், பிரியங்கா ஆறுதல்


உத்தரபிரதேசத்தில் கற்பழித்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல், பிரியங்கா ஆறுதல்
x
தினத்தந்தி 4 Oct 2020 2:45 AM IST (Updated: 4 Oct 2020 1:57 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணின் குடும்பத்தினரை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினர்.

நொய்டா,

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 14-ந்தேதி உயர்சாதியை சேர்ந்த 4 வாலிபர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். சம்பவத்தின்போது வாலிபர்கள் பயங்கரமாக தாக்கியதால் படுகாயமடைந்த அவர் கடந்த 29-ந்தேதி டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அமைத்து உள்ளார். அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 4 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ள இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மாநில அரசை கண்டித்து அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைப்போல இந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஹத்ராஸ் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம், இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகத்தினருக்கும், அரசியல் கட்சியினருக்கும் தடை விதித்து இருந்தது.

எனினும் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் கடந்த 1-ந்தேதி டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம் செல்ல முயன்றனர்.

ஆனால் நொய்டா அருகே உத்தரபிரதேச எல்லையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் விடுவிக்கப்பட்ட அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைப்போல ஹத்ராஸ் செல்ல முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலரும் நேற்று முன்தினம் ஹத்ராஸ் அருகே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இந்தநிலையில் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் நேற்று மீண்டும் டெல்லியில் இருந்து ஹத்ராஸ் புறப்பட்டனர். அவர்களுடன் காங்கிரஸ் தொண்டர்களும் உடன் சென்றனர். அவர்களை நொய்டாவில் நேற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

பின்னர் ராகுல், பிரியங்கா உள்பட 5 பேர் மட்டும் ஹத்ராஸ் செல்வதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். கொரோனா பரவல் காரணமாக நொய்டா, கிரேட்டர் நொய்டா, ஹத்ராஸ் மற்றும் உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் 5 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் ஹத்ராஸ் சென்றனர். அவர்கள் ஹத்ராசில் இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுடன் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முகுல் வாஸ்னிக் ஆகியோரும் உடனிருந்தனர்.

காங்கிரசார் வருகையையொட்டி இளம்பெண்ணின் கிராமம் மற்றும் ஹத்ராஸ் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே ஹத்ராசில் 2 நாட்களுக்கும் மேலாக நீடித்த கெடுபிடிகளுக்குப்பின் நேற்று அங்கு ஊடகத்தினரை போலீசார் அனுமதித்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை அகற்றிய அவர்கள், எந்த குழுவினராயினும் வெறும் 5 பேரை மட்டுமே ஹத்ராசுக்குள் நுழைய அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஹத்ராஸ் நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்தவகையில் அரசு சார்பில் மாநில கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) அவனிஷ் அவஸ்தி, போலீஸ் டி.ஜி.பி. எச்.சி.அவஸ்தி ஆகியோர் நேற்று இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இது ஒருபுறம் இருக்க ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தங்கள் விசாரணையை முடித்து விட்டனர்.

இந்த குழுவின் விசாரணையை நிராகரித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை அல்லது சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையிலான விசாரணையே தேவை எனக் கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதைப்போல மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் எனக்கூறியிருந்த அவர்கள், நேற்று சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையிலான விசாரணையே வேண்டும் என தெரிவித்தனர். சி.பி.ஐ. விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கும் என அச்சம் தெரிவித்தனர்.

போலீசிடமும், ஊடகத்திடமும் பொய்யான தகவல் எதையும் கொடுக்கவில்லை எனக்கூறிய அவர்கள், எனவே உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படமாட்டோம் என கூறியதுடன், கடந்த 2 நாட்களாக தங்கள் செல்போன்களை அணைத்துவிட்டு, வீட்டுக்காவலில் வைத்திருந்ததாக போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் மீது குற்றமும் சாட்டியுள்ளனர்.

Next Story