பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் அணிக்கு எதிராக லாலு பிரசாத் மகன் தலைமையில் மெகா கூட்டணி


பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் அணிக்கு எதிராக லாலு பிரசாத் மகன் தலைமையில் மெகா கூட்டணி
x
தினத்தந்தி 4 Oct 2020 4:48 AM IST (Updated: 4 Oct 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் அணிக்கு எதிராக லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி உருவாகி உள்ளது. இதில் தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட்னா,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், பீகார் சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் 28-ந்தேதி, அடுத்த மாதம் 3-ந்தேதி, 7-ந்தேதி என 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 71 தொகுதிகளில், 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. 8-ந்தேதி முடிகிறது. 2-ம் கட்ட தேர்தலை சந்திக்கும் 94 தொகுதிகளில் 9-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

இந்த சட்டசபை தேர்தலை முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் இன்றி, பீகார் சந்திக்கிறது. அவரது மகன் தேஜஸ்வி யாதவ் முதல்-மந்திரி வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

இந்த தேர்தலில், முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்டு லெனினிஸ்டு), இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்டு, வி.ஐ.பி., ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைந்துள்ளது.

இந்த கூட்டணியில், லாலு பிரசாத்தின் தூதர் போலா யாதவ், ராஞ்சியில் இருந்து பாட்னா திரும்பியுள்ள நிலையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

பாட்னாவில் நேற்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் நிருபர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ், தொகுதி பங்கீட்டை முறைப்படி அறிவித்தார்.

அப்போது அவர், “எங்கள் பழைய கூட்டாளியான விகாஷீல் இன்சான் கட்சிக்கும் (வி.ஐ.பி.), ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கும் எங்கள் கட்சி தனது 144 தொகுதிகளில் இருந்து இடம் அளிக்கும்” என அறிவித்தார்.

இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது இது இரு மடங்கு எண்ணிக்கையிலான தொகுதிகள் ஆகும்.

நவம்பர் 7-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிற வால்மீகி நகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணி அரசை அகற்ற தேஜஸ்வி யாதவ் சபதம் செய்தார்.

மெகா கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் வருமாறு:-

மொத்த இடங்கள் - 243

ராஷ்ட்ரீய ஜனதாதாளம்

- 144

காங்கிரஸ் - 70

இந்திய கம்யூ. (எம்.எல்.)- 19

இந்திய கம்யூனிஸ்டு - 6

மார்க்சிய கம்யூனிஸ்டு - 4

இந்த கூட்டணிக்கு தேஜஸ்வி யாதவ் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story