ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது - சிவசேனா விமர்சனம்
ராமர்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நடப்பதாக சிவசேனா விமர்சித்து உள்ளது.
மும்பை,
உத்தரபிரதேச மாநில ஹத்ராசில் நடந்த கற்பழிப்பு சம்பவம் மற்றும் அங்கு செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தப்பட்ட விதம் குறித்து சிவசேனா கட்சி அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா அரசை கடுமையாக விமா்சித்து உள்ளது.
இதுதொடர்பாக அந்த கட்சி சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் உத்தரபிரதேசத்தில் ‘ ராமர் ஆட்சி ‘ நடக்கவில்லை. அங்கு நிலவி வரும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை பார்க்கும் போது உத்தரபிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கற்பழிப்பு, இளம்பெண் கொலைகள் அந்த மாநிலத்தில் அதிகளவில் நடக்கின்றன. ஹத்ராசில் 19 வயது பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மரண வாக்குமூலத்தில் அந்த பெண் கற்பழிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் உத்தரபிரதேச அரசு தற்போது அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என கூறுகிறது.
ஹத்ராஸ் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அதே மாநிலம் பல்ராம்புரில் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு நடந்தும் டெல்லி ஆட்சியாளர்களோ (மத்திய அரசு) , யோகி ஆதித்யநாத் அரசோ ஒரு அடி நகரவில்லை. அரசாங்கமோ கற்பழிப்பு நடக்காத போது எதிர்கட்சிகள் ஏன் முதலை கண்ணீர் வடிக்கிறது என கேட்கின்றன?. யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அவரது மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை சட்டை காலரை பிடித்து தரையில் தள்ளிவிட்டனர். பெரிய அரசியல் கட்சியின் மூத்த தலைவரை இப்படி அவமதிப்பது ஜனநாயக கூட்டுபலாத்காரம் ஆகும்.
Related Tags :
Next Story