பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணியில் போட்டியிட போவது இல்லை - லோக் ஜன சக்தி அறிவிப்பு


பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணியில் போட்டியிட போவது இல்லை - லோக் ஜன சக்தி அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2020 5:12 PM IST (Updated: 4 Oct 2020 5:18 PM IST)
t-max-icont-min-icon

பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணியில் போட்டியிட போவது இல்லை என ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி அறிவித்துள்ளது.

பாட்னா,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், பீகார் சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் 28-ந்தேதி, அடுத்த மாதம் 3-ந்தேதி, 7-ந்தேதி என 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 71 தொகுதிகளில், 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது. 8-ந்தேதி முடிகிறது. 2-ம் கட்ட தேர்தலை சந்திக்கும் 94 தொகுதிகளில் 9-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

இந்த சட்டசபை தேர்தலை முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலுபிரசாத் இன்றி, பீகார் சந்திக்கிறது. அவரது மகன் தேஜஸ்வி யாதவ் முதல்-மந்திரி வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

இந்த தேர்தலில், முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்டு லெனினிஸ்டு), இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்டு, வி.ஐ.பி., ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைந்துள்ளது.

இந்த கூட்டணியில், லாலு பிரசாத்தின் தூதர் போலா யாதவ், ராஞ்சியில் இருந்து பாட்னா திரும்பியுள்ள நிலையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

பாட்னாவில் நேற்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் நிருபர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ், தொகுதி பங்கீட்டை முறைப்படி அறிவித்தார்.

அப்போது அவர், எங்கள் பழைய கூட்டாளியான விகாஷீல் இன்சான் கட்சிக்கும் (வி.ஐ.பி.), ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கும் எங்கள் கட்சி தனது 144 தொகுதிகளில் இருந்து இடம் அளிக்கும் என அறிவித்தார். இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணியில் போட்டியிட போவது இல்லை என ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி அறிவித்துள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் போட்டியிட போவது இல்லை என லோக் ஜன சக்தியின் தேசிய பொதுச் செயலாளர் அப்துல் காலிக் அறிவித்துள்ளார்.  மேலும் தேசிய அளவிலும், மக்களவை தேர்தலிலும் பாஜகவுடன் அமைத்த கூட்டணி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ் குமார் தலைமையின் கீழ் பீகார் தேர்தலை சந்திக்க வேண்டாம் என  லோக் ஜனசக்தி  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story