நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65 லட்சத்தை கடந்தது


நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 4 Oct 2020 8:53 PM GMT (Updated: 4 Oct 2020 8:53 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 65 லட்சத்தை கடந்துள்ள நிலையில், அதில் 55 லட்சத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர்.

புதுடெல்லி,

மனித வாழ்க்கை முறையையே தலைகீழாக புரட்டி போட்டிருக்கும் கொரோனா தொற்று, மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருக்கிறது. லட்சக்கணக்கில் நிகழும் பாதிப்புகளும், ஆயிரக்கணக்கில் நிகழும் மரணங்களும் அன்றாட செய்தியாகி விட்டன.

இதில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் நிலைமையும் மோசமாகவே உள்ளது. கணிசமான எண்ணிக்கையில் ஏற்படும் தினசரி பாதிப்பையும், மரணங்களையும் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் தொற்றில் இருந்து முழுமையான விடுதலை பெறுவதற்கான அறிகுறியை காணவில்லை.

அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்திலும் 75 ஆயிரத்து 829 புதிய பாதிப்புகள் நாடு முழுவதும் பதிவாகி இருக்கின்றன. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 65 லட்சத்து 49 ஆயிரத்து 374 ஆகி இருக்கிறது.

புதிய நோயாளிகளில் 78 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மராட்டியர்கள் ஆவர். இதைத் தவிர கர்நாடகா, கேரளா மாநிலங்கள் முறையே 9,886, மற்றும் 7,834 புதிய பாதிப்புகளை பெற்றிருக்கின்றன.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 940 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவின் தினசரி மரணம் 1000-க்கு கீழே குறைந்திருப்பது கடந்த சில நாட்களில் இது முதல் முறையாகும். இந்த இறப்புகளையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து ஆயிரத்து 782 ஆகும்.

மேற்படி 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களை விட, மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அந்தவகையில் 82 ஆயிரத்து 260 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்து 9 ஆயிரத்து 966 ஆக உயர்ந்து விட்டது.

புதிதாக குணமடைந்தவர்களில் 75.44 சதவீதத்தினர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதிலும் மராட்டியர்களே அதிகமாகவும், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. நாட்டின் குணமடைந்தவர் விகிதம் 84.13 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 9 லட்சத்து 37 ஆயிரத்து 625 ஆகும். இது மொத்த பாதிப்பில் 14.32 சதவீதம் ஆகும். சிகிச்சை பெறுவோரை பொறுத்தவரை, முந்தைய 24 மணி நேரத்தைவிட 7,371 பேர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை கடந்த 13 நாட்களாக தொடர்ந்து 10 லட்சத்துக்கும் கீழே என்ற நிலையில் தொடர்வது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் ஆகும். அதிகமான பரிசோதனை, விரைவான கண்டறிதல், தீவிர சிகிச்சை போன்ற நடவடிக்கைகளே, இந்தியாவில் அதிகமானோர் குணமடைவதற்கு காரணம் என மத்திய அரசு கூறியுள்ளது.

இதற்கிடையே நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 42 ஆயிரத்து 131 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் இதுவரை 7.89 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் கூறியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் சராசரியாக தினந்தோறும் 11.50 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு நடக்கும் அதிகமான பரிசோதனைகளால் விரைவில் நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால்தான் நாட்டின் இறப்பு விகிதம் 1.55 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story