இளம்பெண் கற்பழித்து கொலை: ஹத்ராஸ் குற்றவாளிகளுக்கு ஆதரவாக கூட்டம்; பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் நடந்தது


இளம்பெண் கற்பழித்து கொலை: ஹத்ராஸ் குற்றவாளிகளுக்கு ஆதரவாக கூட்டம்; பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் நடந்தது
x
தினத்தந்தி 5 Oct 2020 5:51 AM IST (Updated: 5 Oct 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் ஹத்ராஸ் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் கூட்டம் நடந்தது.

ஹத்ராஸ்,

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உயர்சாதி வாலிபர்களால் கற்பழிக்கப்பட்ட தலித் இளம்பெண் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கும் மாநில அரசு பரிந்துரைத்து உள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக நேற்று பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்விர் சிங் பெகலவனின் வீட்டில் கூட்டம் ஒன்று நடந்தது. இளம்பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்த இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், இளம்பெண்ணின் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குபதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பாக பெகலவனின் மகன் மன்வீர் சிங் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஏனெனில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அடிக்கடி தங்கள் நிலையை மாற்றுகிறார்கள். மாநில அரசை குற்றம் சாட்டுவதற்காகவே ஒட்டுமொத்த சம்பவமும் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் முதன் முதலில் புகார் அளித்தவர்கள் (இளம்பெண்ணின் குடும்பத்தினர்) மீதுதான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்’ என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரும் அவரவர் வீட்டில் இருந்தே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், அவர்கள் தவறிழைத்திருந்தால் எப்படி வீட்டிலேயே இருப்பார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.

Next Story