இந்திய-சீன ராணுவம் 12-ஆம் தேதி 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை
எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்தியா - சீனா அதிகாரிகள் இதுவரை 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. சமீப காலமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது.
இதனால், பதற்றத்தை தணிக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், பேச்சுவார்த்தையில் இதுவரை ஆக்கப்பூர்வமான உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில், பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வரும் அக்டோபா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை பிரதிநிதிகளும் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அடுத்த 4 மாதங்களுக்கு கடும் பனிப்பொழிவு உள்பட மோசமான வானிலை நிலவும் என்பதால் அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக இரு நாட்டு ராணுவமும் கூடுதலாக படைகளை குவித்தல் உள்ளிட்ட எந்த புதிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்பது உறுதி செய்யப்படுமென ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கடைசியாக செப்டம்பா் 21-ஆம் தேதி 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில் எல்லையில் இரு நாட்டு படைகளும் கூடுதல் வீரா்களை நிறுத்தக் கூடாது என்பது தொடா்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story