முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், மூத்த அமைச்சர்கள் 7 பேர் திடீர் ஆலோசனை
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமியை மூத்த அமைச்சர்கள் இன்று திடீரென சந்தித்துப்பேசினர்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆளும் அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில், முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்கள் என்பது தொடர்பாக கடந்த சில வாரங்களாக விவாதங்கள் எழுந்துள்ளன. அதிமுக செயற்குழு கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. செயற்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓ பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி இருவரும் காரசாரமாக வாதம் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு மத்தியில் வரும் 7 ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமி கூறினார். இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் கடந்த சில தினங்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி,வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் திடீரென சந்தித்து பேசியுள்ளனர். தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழக மக்கள், அதிமுக தொண்டர்கள் நலனை கருத்தில் கொண்டு தனது முடிவு இருக்கும் என தெரிவித்து இருந்த நிலையில், மேற்கூறிய சந்திப்பு நடைபெற்றுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story