பிரியங்கா ஆடையை இழுத்த விவகாரம்; உ.பி. போலீஸ் உரிய விளக்கம் அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
பிரியங்கா ஆடையை இழுத்த விவகாரத்தில் உ.பி. போலீஸ் உரிய விளக்கம் அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உயர் சாதியைச் சேர்ந்த வாலிபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் கடந்த சனிக்கிழமை ஹத்ராஸ் சென்றனர்.
தொண்டர்களுடன் படைசூழ சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஆண் காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார். பிரியங்கா காந்தியிடம் போலீஸ்காரர் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பெண் அரசியல் தலைவர்கள் பலரும் உத்தரபிரதேச போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரியங்கா விவகாரம் தொடர்பாக தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என உத்தரபிரதேச போலீசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் “பிரியங்கா காந்தியிடம் போலீஸ்காரர் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது. உணர்வற்ற இந்த நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த பிரச்சினையின் தீவிர தன்மையை உணர்ந்த ஆணையத்தின் தலைவர் ஷர்மரேகா இதுபற்றி உத்தரப்பிரதேச போலீஸ் உடனடியாக விளக்கம் அளிக்க வலியுறுத்தி உள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பிரியங்கா காந்தியின் ஆடையை பிடித்து இழுத்த விவகாரத்தில் உத்தரபிரதேச போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story