கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் தலித், பழங்குடியின பெண்கள் 263 பேர் படுகொலை - மாநில போலீசார் தகவல்


கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் தலித், பழங்குடியின பெண்கள் 263 பேர் படுகொலை - மாநில போலீசார் தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2020 6:17 AM GMT (Updated: 6 Oct 2020 6:17 AM GMT)

கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் தலித், பழங்குடியின பெண்கள் மொத்தம் 263 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக, மாநில போலீசார் கூறியுள்ளனர்.

பெங்களூரு, 

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண், சமீபத்தில் 4 பேரால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் தலித், பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த 263 பெண்கள் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து மாநில போலீசார் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரை 2½ ஆண்டுகள் தலித், பழங்குடியின பெண்களுக்கு எதிராக 4,162 குற்றங்கள் நடந்து உள்ளன. 2018-ம் ஆண்டு தலித், பழங்குடியின பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக மாநிலத்தில் 130 போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தது.

2019-ம் ஆண்டு 210 போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவானது. மேலும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டு 1,219 பேர் மீதும், 2019-ம் ஆண்டு 1,187 பேர் மீதும், 2020-ம் ஆண்டு 899 பேர் மீதும் வழக்குகள் பதிவாகி உள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரை மாநிலத்தில் 428 தலித், பழங்குடியின பெண்கள் கற்பழிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 2018-ம் ஆண்டு 130 பேரும், 2019-ம் ஆண்டு 210 பேரும், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு வரை 88 பேரும் கற்பழிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 2½ ஆண்டுகளில் மாநிலத்தில் தலித், பழங்குடியின பெண்கள் 263 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில் 2018-ம் ஆண்டு 113 பேரும், 2019-ம் ஆண்டு 105 பேரும், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு வரை 45 பேரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறியுள்ளனர்.

Next Story