பீகார் சட்டசபை தேர்தல்: ஜேடியூ-பாஜக இடையே தொகுதி பங்கீடு


பீகார் சட்டசபை தேர்தல்: ஜேடியூ-பாஜக இடையே தொகுதி பங்கீடு
x

பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூ-பாஜக இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாட்னா, 

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க. இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்- மந்திரியாக நிதிஷ்குமார் உள்ளார். இந்த கூட்டணியில் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் உள்ளது.

இந்த நிலையில் 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

மெகா கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டது மொத்தம் உள்ள 243 இடங்களில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 70, இந்திய கம்யூனிஸ்டு (எம்.எல்.) 19, இந்திய கம்யூனிஸ்டு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 4 இடங்களில் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தை ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளம் - பாரதீய ஜனதா கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மொத்தம் உள்ள 243 இடங்களில் 122 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ஜனதாவுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிஷ்குமார் தனக்குள்ள தொகுதிகளில் இருந்து ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிக்கு 7 இடங்கள் ஒதுக்கி உள்ளது.

Next Story