ரெயில் கிளம்ப 30 நிமிடத்துக்கு முன்பு 2-வது முன்பதிவு அட்டவணை; 10-ந்தேதி முதல் மீண்டும் அமல்


ரெயில் கிளம்ப 30 நிமிடத்துக்கு முன்பு 2-வது முன்பதிவு அட்டவணை; 10-ந்தேதி முதல் மீண்டும் அமல்
x
தினத்தந்தி 7 Oct 2020 3:57 AM IST (Updated: 7 Oct 2020 3:57 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்பு 2-வது முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் முறை, 10-ந்தேதி முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது.

புதுடெல்லி,

கொரோனா பரவல் காலத்துக்கு முன்பு, ஒரு ரெயில் புறப்படும் நேரத்துக்கு 4 மணி நேரத்துக்கு முன்பு, அதன் முதலாவது முன்பதிவு அட்டவணை தயாரித்து வெளியிடப்படும். அதில், காலியாக உள்ள இடங்களுக்கு ரெயில் நிலைய முன்பதிவு கவுண்ட்டர்களிலும், ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்.

2-வது முன்பதிவு அட்டவணை, ரெயில் புறப்படும் நேரத்துக்கு 5 முதல் 30 நிமிடத்துக்கு முன்பு தயாரிக்கப்படும். அதுவரை, கடைசி நேர முன்பதிவு அனுமதிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே எடுக்கப்பட்ட டிக்கெட்டுகள், அந்த நேரத்தில் ரத்து செய்யவும் அனுமதிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில், 2-வது முன்பதிவு அட்டவணை, ரெயில் புறப்படும் நேரத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பே தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், கடைசிநேர முன்பதிவுக்கான கால அளவு குறைந்துள்ளது.

இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக, 2-வது அட்டவணை தயாரிப்பதில் பழைய முறையே தொடர வேண்டும் என்று ரெயில்வே கோட்டங்கள் கோரிக்கை விடுத்தன.

அதைத்தொடர்ந்து, இதை பரிசீலித்த ரெயில்வே நிர்வாகம், பழைய முறைப்படி, ரெயில் புறப்படும் நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு 2-வது முன்பதிவு அட்டவணை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

வருகிற 10-ந்தேதி முதல், இந்த முறை அமலுக்கு வருகிறது. இதற்கேற்ப மென்பொருளில் தேவையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Next Story