ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவம்: உ.பி. அரசு சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்


ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவம்: உ.பி. அரசு சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Oct 2020 3:47 AM GMT (Updated: 7 Oct 2020 3:47 AM GMT)

ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக உ.பி. அரசு சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.

லக்னோ, 

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயர் சாதியைச் சேர்ந்த வாலிபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினரிடமும் அவர்களை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக ஹத்ராஸ் செல்லும் எதிர்க்கட்சியினிடமும் உத்தரப்பிரதேச போலீசார் தொடர்ந்து கடுமையாக நடந்து கொள்வது கண்டனத்துக்கு வழிவகுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தனது சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மீது போலீசின் மனிதாபிமானமற்ற அணுகுமுறையால் முழு நாடும் எரிச்சலடைகிறது. மாநில அரசு தனது தவறை சரிசெய்து வேதனைக்குள்ளான குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் அல்லது எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பது கடினமாக இருக்கும்.

ஹத்ராஸ் சம்பவத்தின் பின்னணியில் சாதி மற்றும் வகுப்புவாத மோதல்கள் சதித் திட்டம் குறித்த அரசாங்கத்தின் குற்றச்சாட்டு சரியானதாக இருக்கலாம் அல்லது பொய் பிரசாரமாக இருக்கலாம். ஆனால் இப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைப்பதில் மட்டுமே அரசு கவனம் செலுத்த வேண்டும். முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அரசின் செயல்களால் ஜனநாயகத்தின் வேர்கள் அச்சுறுத்தப்படுகின்றன. எனவே மாநில அரசு தனது சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story