டெல்லியில் அதிகாலையில் என்கவுண்ட்டர்; 4 கிரிமினல் குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீசார்
டெல்லியில் இன்று அதிகாலை நடந்த என்கவுண்ட்டரில் 4 கிரிமினல் குற்றவாளிகளை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியின் பேகம்பூரில் தீப் விஹார் என்ற பகுதியில் அனுமன் சவுக் அருகே இன்று அதிகாலை 3.30 மணியளவில் கார் ஒன்றில் கும்பல் ஒன்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தது. அவர்களை பிடிக்க போலீசார் முயன்றுள்ளனர். எனினும் போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர்.
எதிரி கும்பல் மீது தாக்குதல் நடத்துவதற்காக அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இந்த தகவல் கிடைத்த போலீசார் சம்பவ பகுதிக்கு முன்பே சென்று காத்திருந்துள்ளனர். இந்நிலையில், போலீசாருக்கும், கும்பலுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.
அந்த கும்பல் போலீசார் குழுவை நோக்கி 22 முறை துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் 28 முறை சுட்டு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கும்பலை சேர்ந்த 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் ரோகித், அமித், ரவீந்தர் மற்றும் சுனில் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அருகேயுள்ள அம்பேத்கர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
அந்த கும்பலின் கார், 4 தானியங்கி பிஸ்டல்கள், 70 தோட்டாக்கள், 2 நாட்டு துப்பாக்கிகள், 3 குண்டு துளைக்காத கவசஉடைகள் மற்றும் ஹெல்மெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த குற்றவாளிகள் அனைவரும் கொலை, கொலை முயற்சி, பணம் கேட்டு மிரட்டல், கொள்ளை மற்றும் துப்பாக்கி சூடு ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுபற்றி அவர்கள் மீது 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தேடப்படும் நபர்கள் பட்டியலில் இருந்த அவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story