எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் ருத்ரம் ஏவுகணை இந்தியா வெற்றிகரமாக சோதனை


எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் ருத்ரம் ஏவுகணை இந்தியா வெற்றிகரமாக சோதனை
x
தினத்தந்தி 9 Oct 2020 11:47 AM GMT (Updated: 9 Oct 2020 11:47 AM GMT)

ருத்ரம் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது, டி.ஆர்.டி.ஓவை ராஜ்நாத் சிங் வாழ்த்தினார்.

புவனேஸ்வர்:

இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), தற்போது மிக மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை தயாரித்துள்ளது.

ருத்ரம்-1 என்ற இந்த ஏவுகணை ஒடிசாவில் உள்ள பலசோர் கடற்கரையில் இருந்து சுகோய் -30 போர் விமானத்தின் மூலம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.  இந்த ஏவுகணை இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) போர் விமானங்களுக்கு வான்வெளியில் மேலாதிக்கத்தை வழங்கும்.

இது முதன்மையாக எதிரிகளின் வான் பாதுகாப்புகளை முடக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரி நாடுகளின் கண்காணிப்பு ரேடார்கள், டிராக்கிங் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை அழிப்பதற்காக உயரங்களில் இருந்து ஏவப்படும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையை ரேடாரால் கண்டறிய முடியாது. அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளே இத்தகைய ரேடார் எதிர்ப்பு ஏவுகணைகளை வைத்துள்ளன.

இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். 


Next Story