சிந்து - பலூசிஸ்தான் செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுகின்றனர் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு
சிந்து மற்றும் பலூசிஸ்தான் பகுதி செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதுடெல்லி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
போராட்டக்காரர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், அரசு இயந்திரம் உள்ளூர் மக்களின் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.அரசியல் தலைவர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக வீதிகளில் இறங்குவதை காணமுடிகிறது
இந்த நிலையில் சிந்து மற்றும் பலூசிஸ்தான் பகுதி செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிந்து மாகாணத்தில் இருந்து நூற்றுக்கணக்கான சிந்தி மற்றும் உருது மொழி பேசும் உள்ளூர் இளம் தொழிலாளர்கள் பாகிஸ்தான் ஏஜென்சிகளால் கடத்தப்பட்டுள்ளனர். அங்கு பலர் பல ஆண்டுகளாக சித்திரவதை செய்யும் கொட்டடிகளில் வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல ராணுவத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உயிரிழந்த பலூச் ஆர்வலர்களின் சடலங்களையும் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைக்கவில்லை. இது மனிதாபிமானம் அற்றது என்பதோடு, சர்வதேச யுத்த விதிகளை முழுமையாக மீறுவதாகும்.
இதுகுறித்து பலூச் தேசியத் தலைவர் அல்லா நாசர் பலோச் கூறும்போது, சிந்து மற்றும் பலூச் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கடத்திச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு கடத்திச் செல்லப்படுபவர்கள் ரசாயன ஆயுதங்கள் மூலம் கொலை செய்யப்படுவதாகவும் அல்லா நாசர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை சீனா வழங்கி வருவதாக அச்சங்கள் எழுந்துள்ளன. எவ்வாறாயினும், இந்த ஆயுதங்கள் முற்றிலும் இறுதி தயாரிப்புகளா அல்லது பரிசோதிப்பதற்காக பலூச் தேசியவாத ஆர்வலர்கள் மீது பயன்படுத்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஜீ நியூஸிடம் தெரிவித்தன.
பலூச் மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடும் போது, பாகிஸ்தான் ரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை நேர்மையற்ற முறையில் பயன்படுத்துவது மட்டுமல்ல, அவர்கள் பலவந்தமாக மக்கள் சீனாவிற்கு கடத்தப்படுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.