மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடல் தகனம்


மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடல் தகனம்
x
தினத்தந்தி 11 Oct 2020 2:14 AM IST (Updated: 11 Oct 2020 2:14 AM IST)
t-max-icont-min-icon

மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

பாட்னா,

மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த 3-ந்தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அவருக்கு மற்றொரு அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என கூறப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை ஆஸ்பத்திரியில் அவர் உயிர் பிரிந்தது.

இதையடுத்து டெல்லியில் உள்ள ராம்விலாஸ் பஸ்வானின் அதிகாரபூர்வ இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து ராம்விலாஸ் பஸ்வானின் உடல் அவரது சொந்த ஊரான பீகார் தலைநகர் பாட்னாவுக்கு விமானம் மூலம் நேற்று முன்தினம் எடுத்துச்செல்லப்பட்டது.

அங்கு லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர்கள் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் ராம்விலாஸ் பஸ்வானின் இறுதி சடங்கு நேற்று அரசு மரியாதையுடன் நடந்தது. இதில் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் ராம்விலாஸ் பஸ்வானின் இறுதி ஊர்வலத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அவர்கள் ராம்விலாஸ் பஸ்வானை வாழ்த்தி கோஷமிட்டபடி சென்றனர். இறுதியாக திகா என்ற இடத்தில் கங்கை நதிக்கரையோரம் ராம்விலாஸ் பஸ்வானின் உடல் தகனம் செய்யப்பட்டது. ராம்விலாஸ் பஸ்வானின் உடலுக்கு அவரது மகன் சிராக் பஸ்வான் (வயது 37) தீமூட்டினார்.

இதனிடையே தந்தையின் இறுதி சடங்குகளை முடித்த சில நிமிடத்தில் சிராக் பஸ்வான் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு இளைப்பாற செய்தனர். அவர் தற்போது நலமாக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Next Story