லடாக் பதற்றத்துக்கு மத்தியில் 35 நாட்களில் 10 ஏவுகணைகளை பரிசோதித்த இந்தியா சீனாவுக்கு எதிராக வலிமையாக தயாராகும் படைகள்


லடாக் பதற்றத்துக்கு மத்தியில் 35 நாட்களில் 10 ஏவுகணைகளை பரிசோதித்த இந்தியா சீனாவுக்கு எதிராக வலிமையாக தயாராகும் படைகள்
x
தினத்தந்தி 11 Oct 2020 4:45 AM IST (Updated: 11 Oct 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

லடாக் மோதலால் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 35 நாட்களில் 10 ஏவுகணைகளை இந்தியா சோதித்து வருகிறது.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன படைகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதால் நிகழ்ந்த நேருக்கு நேர் மோதல், கடந்த ஜூன் மாதத்தில் உடல் ரீதியான மோதலாக உருமாறியது. இதில் இருதரப்பிலும் உயிர்ச்சேதங்களும் நிகழ்ந்தன. அடுத்த 2 மாதங்களுக்குள் சீன ராணுவம் துப்பாக்கிச்சூட்டையும் நடத்தியது.

இருநாட்டு எல்லைப்பகுதியை அமைதியின் பாதைக்கு திருப்புவதற்கு இருதரப்பும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் சீன ராணுவம் எல்லையில் இருந்து பின்வாங்க மறுப்பதால், அமைதி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை.

இதனால் சீனாவின் சவாலை சமாளிப்பதற்காக அங்கு இந்தியாவும் படைகளை குவித்து கண்காணித்து வருகிறது. எனவே லடாக் பதற்றம் நீறுபூத்த நெருப்பாகவே நீடிக்கிறது.

இது ஒருபுறம் இருக்க இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. சமீப நாட்களாக ஏவுகணை சோதனைகளை அடுத்தடுத்து நிகழ்த்தி வருகிறது. வருகிற ஓரிரு நாட்களுக்குள் சப்-சானிக் ஏவுகணையான நிர்பயை சோதிக்க உள்ளது. இந்த ஏவுகணையையும் சேர்த்து 10 ஏவுகணைகள் 35 நாட்களில் சோதிக்கப்பட்டு இருக்கின்றன.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள், வழக்கமான ஏவுகணைகள் என உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை தயாரித்து வரும் டி.ஆர்.டி.ஓ., அடிக்கடி ஏவுகணைகள் சோதனை நடத்துவது இயல்புதான்.

ஆனால் இந்த தொடர் பரிசோதனைகள் வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல என டி.ஆர்.டி.ஓ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். லடாக்கில் இருந்து வெளியேற மறுக்கும் சீன ராணுவம் மீண்டும் வாலாட்டினால் அதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே டி.ஆர்.டி.ஓ. இந்த பரிசோதனைகளை வேகமாக நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

அந்தவகையில் கடந்த மே மாதம் சீனாவின் ஆக்கிரமிப்பு சிந்தனை வெளிப்பட்ட உடனேயே, அதாவது கொரோனா ஊரடங்கு தொடக்க நாட்களிலேயே, சீனாவை வெளியேற்றுவதற்காக நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக சீனாவின் அமைதி திட்டங்களில் இந்தியாவுக்கு சந்தேகம் வலுத்து வருவதால், எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவின் ஏவுகணை திட்டங்களை வேகப்படுத்துமாறு டி.ஆர்.டி.ஓ.வை மத்திய அரசு கேட்டுக்கொண்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதன்படியே இந்த பரிசோதனைகள் வேகமெடுத்து உள்ளன. இவ்வாறு அடுத்தடுத்து நடந்து வரும் ஏவுகணை பரிசோதனைகள், சீனாவுக்கு எதிராக இந்திய படைகள் மிகவும் வலுவாக தயாராவதையே காட்டுவதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

நிர்பய் ஏவுகணை

இதுவரை நடந்துள்ள 9 பரிசோதனைகளில் பிரமோஸ் ஏவுகணை (400 கி.மீ.), அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற சவுரியா சூப்பர்சானிக் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோக்களை செலுத்தும் ஏவுகணை, அணு ஆயுத திறன்பெற்ற பிரித்வி-2 (இரவு நேர சோதனை) போன்ற ஏவுகணைகள் முக்கியமானவை ஆகும்.

விரைவில் பரிசோதிக்க இருக்கும் நிர்பய் ஏவுகணை லடாக்கின் மலைப்பாங்கான பகுதிகளுக்கு மிகுந்த பலனளிக்கும். இதைப்போல புதிய தலைமுறை ஆயுதமான சவுரியா ஏவுகணை 200 கிலோ வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு வினாடிக்கு 2.4 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் பெற்றவை ஆகும். இந்த ஏவுகணைகளை படைகளில் சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story