மும்பை ஆரே காலனி வனப்பகுதியாக அறிவிப்பு- மெட்ரோ பணிமனையை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு


மும்பை ஆரே காலனி வனப்பகுதியாக  அறிவிப்பு- மெட்ரோ பணிமனையை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு
x
தினத்தந்தி 11 Oct 2020 7:13 PM IST (Updated: 11 Oct 2020 7:13 PM IST)
t-max-icont-min-icon

மும்பை ஆரே காலனி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பையில் கொலபா - பாந்திரா - சீப்ஸ் இடையே 3-வது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ெரயில் திட்டத்தின் பணிமனை இயற்கை எழில் கொஞ்சும் மரம், செடி, கொடிகள் நிறைந்த ஆரேகாலனியில் அமைக்க முந்தைய பாஜக அரசு அனுமதி கொடுத்தது.  

இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பிரபலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பாரதீய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான முந்தைய அரசாங்கம் அங்கு மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பதில் உறுதியாக இருந்தது. அந்த கூட்டணி அரசில் அங்கம் வகித்த சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கிடையில்,  கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றிபெற்றது. ஆனால், அரசியல் காரணங்களால் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த கூட்டணியின் தலைமையில்  மாநில முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.  

இந்த நிலையில், 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட மும்பை ஆரே காலனி வனப்பகுதியாக மராட்டிய அரசு அறிவித்துள்ளது. மெட்ரோ ரெயில் பணி மனை கன்ஜூர்மாக் பகுதிக்கு இட மாற்றம் செய்யப்பட உள்ளது. அதேபோல், ஆரே காலனியில் பணிமனை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும் எனவும் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

Next Story