முத்தலாக்கை எதிர்த்து வழக்கு தொடர்ந்த சயாரா பானோ, பா.ஜனதாவில் இணைந்தார்
உத்தரகாண்டின் உத்தம்நகர் மாவட்டத்தை சேர்ந்த சயாரா பானோ என்ற பெண்ணை அவரது கணவர் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தார்.
டேராடூன்,
உத்தரகாண்டின் உத்தம்நகர் மாவட்டத்தை சேர்ந்த சயாரா பானோ என்ற பெண்ணை அவரது கணவர் முத்தலாக் மூலம் விவாகரத்து செய்தார். இதனால் முத்தலாக்கை எதிர்த்து 2016-ம் ஆண்டு முதன் முதலாக சுப்ரீம் கோர்ட்டில் சயாரா பானோ வழக்கு தொடர்ந்தார். இதன் தொடர்ச்சியாக மத்திய பா.ஜனதா அரசு முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்ததால், அந்த முறை ஒழிக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தை கொண்டு வந்து முஸ்லிம் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியதால், பா.ஜனதாவில் இணைய சயாரா பானோ விரும்பினார். அதன்படி நேற்று அவர் மாநில பா.ஜனதா தலைவர் பன்சிதர் பகத் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘அடிப்படையில் முஸ்லிம் பெண்கள் மீதான பா.ஜனதாவின் முற்போக்கான அணுகுமுறை, முத்தலாக்கை சட்டவிரோதமாக்குவதில் இருந்த உறுதிப்பாடு, பிரதமர் மோடியின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பார்வை போன்றவையே என்னை கட்சியில் சேர தூண்டியது. சிறுபான்மையினர் மீதான பா.ஜனதாவின் நியாயமான நோக்கங்களை நான் நம்புகிறேன். பா.ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற தவறான எண்ணம் அழிக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.
Related Tags :
Next Story