அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்; காங்கிரஸ் அறிவிப்பு


அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்; காங்கிரஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Oct 2020 10:01 AM IST (Updated: 12 Oct 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

நடிகை குஷ்பு, பா.ஜனதாவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கடந்த சில தினங்களாக டுவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டார். அதேபோல் உள்துறை மந்திரி அமித்ஷா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.

அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர், உள்துறை மந்திரி, முதல்-அமைச்சர் ஆகியோருக்கு வாழ்த்து சொல்வதில் எந்த தவறும் இல்லை எனவும் அவர் கூறி வந்தார்.

இதையடுத்து கடந்த சில தினங்களாக நடிகை குஷ்பு, பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக வதந்தி பரவியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றுவிட்டு திரும்பிவந்த நடிகை குஷ்பு, நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென அவசரம் அவசரமாக டெல்லி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார்.

அப்போது நடிகை குஷ்புவிடம் நிருபர்கள், நீங்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வருகிறதே உண்மையா? என்று கேட்டனர். அதற்கு அவர், “கருத்து சொல்ல விரும்பவில்லை” (நோ காமண்ட்ஸ்) என பதில் அளித்தார்.

மேலும் அவரிடம், நீங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறீர்களா? என்று கேட்டதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அத்துடன் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல போவதில்லை என கூறிவிட்டு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவருடைய கணவரும், திரைப்பட இயக்குனருமான சுந்தர்.சி.யும் உடன் சென்றார்.

அவர் பா.ஜ.க.வில் இன்று இணைய இருக்கிறார் என்றும் டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை இன்று சந்திக்கிறார் என்றும் தகவல் வெளியான நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டு உள்ளார்.  பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களில் காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியுள்ளார்.

Next Story