முத்தலாக் தடை சட்டத்தினால் ராஜமாதாவின் பார்வையை நாடு முன்னெடுத்து சென்றுள்ளது; பிரதமர் மோடி பேச்சு
முத்தலாக் தடை சட்டம் இயற்றியதனால் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற ராஜமாதா சிந்தியாவின் பார்வையை நாடு முன்னெடுத்து சென்றுள்ளது என ரூ.100 நினைவு நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
புதுடெல்லி,
ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவின் தாயார் மற்றும் மூத்த அரசியல்வாதியான ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு அவரது நினைவாக மத்திய அரசு சார்பில் ரூ.100 நாணயம் வெளியிட முடிவானது.
இதன்படி, மத்திய நிதி அமைச்சகத்தினால் இந்த சிறப்பு நாணயம் வடிவமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மெய்நிகர் நிகழ்ச்சி வழியே நாணயம் வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்பொழுது, ராஜமாதா சிந்தியா அவருடைய வாழ்க்கையை ஏழை மக்களுக்காக அர்ப்பணித்து கொண்டார். அதிகாரங்கள் முக்கியம் அல்ல, பொதுமக்களுக்கு சேவை செய்வதே முக்கியம் என அவர் மக்கள் பிரதிநிதிகளுக்கு நிரூபித்து காட்டியுள்ளார்.
முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டமியற்றியதன் வழியே, பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற ராஜமாதா சிந்தியாவின் பார்வையை நாடு முன்னெடுத்து சென்றுள்ளது என பேசியுள்ளார்.
3 முறை தலாக் கூறி உடனடி விவகாரத்து செய்யும் நடைமுறைக்கு எதிராக மத்திய அரசு முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்துள்ளது. இதனால், முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டு சிறை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த புதிய சட்டத்தின் கீழ் தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story