மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம்: ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை


மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம்: ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை
x
தினத்தந்தி 12 Oct 2020 9:00 PM GMT (Updated: 12 Oct 2020 8:35 PM GMT)

பல மாநிலங்கள் ஏற்காததால், நேற்றைய கூட்டத்திலும் ஜி.எஸ்.டி. இழப்பீடு குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.

புதுடெல்லி,

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த ஆண்டு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையில் ரூ.2.35 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. எனவே ரிசர்வ் வங்கி மூலம் ரூ.97 ஆயிரம் கோடி அல்லது வெளிசந்தையில் இருந்து ரூ.2.35 லட்சம் கோடி கடன் வாங்குமாறு 2 பரிந்துரைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கூறியது.

இதை சுமார் 21 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டு கடன் வாங்க சம்மதித்து உள்ளன. ஆனால் மீதமுள்ள மாநிலங்கள் இதை ஏற்றுக்கொள்ளாமல், இந்த விவகாரத்தில் ஒருமித்த முடிவு எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன.

எனவே இதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் பேசிய நிர்மலா சீதராமன், ‘மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக மத்திய அரசால் கடன் வாங்க முடியாது. ஏனெனில் இதனால் அரசு மற்றும் தனியார் துறைக்கு கடன் வாங்கும் செலவுகள் அதிகரிக்கும். அதேநேரம் மாநிலங்களுக்கு கடன் பெறுவது பிரச்சினை இருக்காது’ என்று கூறினார்.

ஆனால் இதை பல மாநிலங்கள் ஏற்காததால், நேற்றைய கூட்டத்திலும் ஜி.எஸ்.டி. இழப்பீடு குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் நிறைவு பெற்றது. இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைவது இது 3-வது முறையாகும்.

Next Story