மாநிலங்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பல்வேறு உலக நாடுகளைப் போல இந்தியாவிலும் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த வைரசில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மத்திய அரசு கடந்த மார்ச் மாத கடைசியில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்தது.
இதனால் தொழில்கள், ஏற்றுமதி, வர்த்தகம் என அனைத்து விதமான பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிப்போயின. இந்த கடுமையான ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.9 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டது.
கடுமையான ஊரடங்கு காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து, அவர்களின் வாங்கும் சக்தி அற்றுப்போனதால் தேவைகள் குறைந்து விட்டன. எனவே நுகர்வோரின் தேவையை அதிகரிக்கும் வகையிலும், நுகர்வோருக்கு வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும் பணப்புழக்கத்தை ஏற்படுத்தினால்தான் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க உத்வேகம் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, நாடு பண்டிகை காலத்தையும் எதிர்கொண்டு உள்ளது. அடுத்தடுத்து வர இருக்கும் பல்வேறு பண்டிகை நாட்களில் மக்கள் வழக்கமாக அதிகமான செலவினங்களை மேற்கொள்வார்கள். இதை கருத்தில் கொண்டு அவர்களது வாங்கும் சக்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவதற்காக அவர்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.
இதற்காக மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம், விடுமுறை பயண சலுகைக்கு ரொக்க வவுச்சர் வழங்கும் திட்டத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-
மத்திய அரசு ஊழியர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுமுறை பயண சலுகை (எல்.டி.சி.) பெறுகிறார்கள். இதில் ஒன்று தங்கள் சொந்த ஊருக்கும், மற்றொன்று நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் செல்வதற்கு பயன்படுத்தலாம். அல்லது இரண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்கு பயன்படுத்தலாம்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக பயணம் செய்யும் நிலையில் ஊழியர்கள் இல்லை. எனவே ஒரு எல்.டி.சி.க்கு ரொக்க வவுச்சர் வழங்கப்படும். இதற்கு வருமான வரிச்சலுகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் ஒரு ஊழியர் இந்த ரொக்க வவுச்சரை 12 சதவீதம் மற்றும் அதற்கு கூடுதலான ஜி.எஸ்.டி. கொண்ட பொருட்களை வாங்குவதற்கே செலவிட வேண்டும். குறிப்பாக உணவு பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்த வேண்டும் என்பது விதியாகும்.
இந்த பொருட்களை ஜி.எஸ்.டி. பதிவு பெற்ற வியாபாரியிடம் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வாங்க வேண்டும். அடுத்த ஆண்டு (2021) மார்ச் 31-ந்தேதி வரை செலவிடலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுத்தால் ரூ.5,675 கோடி அளவுக்கு அரசுக்கு செலவாகும். பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர்களும் இந்த திட்டத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக ரூ.1900 கோடி செலவாகும்.
இதைப்போல மாநில அரசுகள் மற்றும் தனியார் துறை ஊழியர்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். அவர்களுக்கும் இந்த வட்டி சலுகை வழங்கப்படும்.
இதைப்போல மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.10 ஆயிரம் ஒரே தவணையாக வழங்கப்படும். இந்த வட்டியில்லா ஊதியக்கடன், மாதந்தோறும் ரூ.1000 என்ற வகையில் 10 மாதங்களில் திரும்ப வசூலிக்கப்படும்.
இந்த முன்பணத்தை வருகிற மார்ச் 31-ந்தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம். இந்த தொகை ரூபே கார்டு மூலம் வழங்கப்படும். அதற்கான வங்கி கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும்.
பண்டிகைக்கால முன்பணம் உள்ளிட்ட முன்பண திட்டங்கள் 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையில் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. எனினும் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பண்டிகைகால முன்பண திட்டத்துக்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மாநிலங்களின் பங்களிப்பான 50 சதவீதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மேலும் ரூ.4 ஆயிரம் கோடி பண்டிகைகால முன்பணம் வழங்கப்படும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
இதைப்போல மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சாலைகள், பாதுகாப்பு உள்கட்டமைப்பு, குடிநீர் வினியோகம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் பாதுகாப்புத்துறைக்கான உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றுக்கான மூலதன செலவினமாக ரூ.25 ஆயிரம் கோடிக்கான கூடுதல் பட்ஜெட் வழங்கப்படுகிறது. இது கடந்த 2020-21-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.4.13 லட்சம் கோடிக்கு மேல் கூடுதலாக வழங்கப்படுகிறது.
இதைத்தவிர மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்காக ரூ.12 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் சிறப்பு திட்டம் வழங்கப்படுகிறது. இந்த கடனை 50 ஆண்டுகளில் மாநிலங்கள் திருப்பி செலுத்திக்கொள்ளலாம்.
இதில் வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.1600 கோடி, உத்தரகாண்ட் மற்றும் இமாசல பிரதேசத்துக்கு ரூ.900 கோடி, மற்ற மாநிலங்களுக்கு ரூ.7,500 கோடி வழங்கப்படும். இதில் பாதியளவு முதல் தவணையாகவும், அதை பயன்படுத்தியபின் மீத தொகையும் வழங்கப்படும்.
இதில் மீதமுள்ள ரூ.2 ஆயிரம் கோடி ஏற்கனவே ஒப்புக்கொண்ட சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டங்கள் மூலம் கூடுதலாக ரூ.36 ஆயிரம் கோடிக்கான (எல்.டி.சி. வவுச்சர் மூலம் ரூ.28 ஆயிரம் கோடி, பண்டிகை கால முன்பணம் மூலம் ரூ.8 ஆயிரம் கோடி) நுகர்வோர் தேவை உருவாக்கப்படும். இதைப்போல ரூ.37 ஆயிரம் கோடிக்கு மத்திய-மாநில மூலதன செலவினம் உருவாக்கப்படும்.
மொத்தத்தில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.73 ஆயிரம் கோடிக்கான தேவை உருவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story