திருவனந்தபுரத்தில் நவராத்திரி பூஜை விழா தொடக்கம்: யாத்திரையாக எடுத்து செல்லப்படுகிறது, திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள்


திருவனந்தபுரத்தில் நவராத்திரி பூஜை விழா தொடக்கம்:  யாத்திரையாக எடுத்து செல்லப்படுகிறது, திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள்
x
தினத்தந்தி 14 Oct 2020 9:17 AM IST (Updated: 14 Oct 2020 9:17 AM IST)
t-max-icont-min-icon

1840- ஆம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

திருவனந்தபுரம்,

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. 1840- ஆம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

அதன்பின்பு, இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் யானை மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். அங்கு நவராத்திரி விழா பூஜையில் பங்கேற்ற பின்பு சாமி சிலைகளை மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு.

இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சாமி சிலைகளை கொண்டு செல்வதில் சில மாற்றங்களை தமிழக மற்றும் கேரள அரசுகள் செய்திருந்தன.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக பல இடங்களில் போராட்டம் நடந்தது. இதையடுத்து இரு மாநில அரசுகளும் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாமி சிலைகளை பாரம்பரிய முறைப்படி கொண்டு செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று காலை சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி முன்னுதித்த நங்கை அம்மனுக்கு தினமும் நடைபெறும் நித்திய பூஜைகள் முடிந்த பின்பு தட்டு வாகனத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், பக்தர்கள் மற்றும் அதிகாரிகள் அரசு விதிமுறைப்படி முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். தொடர்ந்து சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு பக்தர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், நான்கு ரத வீதிகளிலும் அம்மன் ஊர்வலமாக வீதி உலா வந்தது.

அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. பக்தர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மலர்தூவி அம்மனை வழியனுப்பி வைத்தனர். அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு ஆசிரமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக நேற்று மதியம் பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலை சென்றடைந்தது.

ஆண்டுதோறும் சாமி சிலை ஊர்வலம் நடைபெறும் போது, வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண்சார்த்து, தீபாராதனை, பூஜைகள் செய்து வழிபடுவார்கள். இதனால், சுசீந்திரத்தில் இருந்து காலையில் புறப்படும் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலை மாலை 6 மணியளவில் சென்றடையும். ஆனால், நேற்று கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சாமி சிலைக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் பூஜைகள் நடத்த அனுமதிக்க வில்லை. இதனால், ஊர்வலம் வேகமாக சென்று நேற்று மதியம் 12.45 மணியளவில் பத்மநாபபுரத்தை சென்றடைந்தது. இதையொட்டி ஏராளமான தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகை மேல்மாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை மாவட்ட கோவில்களின் இணை ஆணையரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளி மலை முருகன், தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் யானை மற்றும் பல்லக்கு வாகனங்களில் எழுந்தருளி திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டுள்ளது. கேரள, தமிழக அரசு மரியாதையுடன் சாமி சிலைகள் எடுத்துச் செல்லப்படுகிறது.

Next Story