உ.பி.யில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை


உ.பி.யில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை
x
தினத்தந்தி 15 Oct 2020 3:00 AM IST (Updated: 15 Oct 2020 2:08 AM IST)
t-max-icont-min-icon

உ.பி.யில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், கிராம தலைவரின் மகன் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.

சித்ரகூட், 

உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் சம்பவம் போல மீண்டும் ஒரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அந்த சிறுமி தற்கொலை செய்து கொள்ள, இது தொடர்பாக கிராம தலைவரின் மகன் உள்பட 3 பேர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் தலித் பெண் கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் ஏற்கனவே நாடு முழுவதும் அதிர்வலையை உருவாக்கி இருக்கிறது. நேற்று முன்தினம் அங்குள்ள கோண்டா நகரத்திற்கு அருகே வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த 3 சகோதரிகள் திராவக வீச்சில் காயம் அடைந்தனர். பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது தெரியவந்திருக்கிறது.

சித்ரகூட் நகரத்திற்கு அருகே 15 வயது தலித் சிறுமி 3 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளாள். பின்பு, குற்றவாளிகள் அவளது கை, கால்களை கட்டிய நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே கொண்டுவந்து போட்டுவிட்டு சென்றதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் கடந்த 8-ந்தேதி அங்குள்ள காட்டுப்பகுதியில் நடந்ததாக அவளது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரை வாங்காமல் புறக்கணித்து வந்த நிலையில் அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டாள்.

அதற்கு பின்பு, புகார் ஏற்கப்பட்டு அந்த கிராம தலைவரின் மகன் மற்றும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு பாதுகாப்புச் சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பாதுகாப்பு சட்டங்கள் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

“பிரேத பரிசோதனையில் சிறுமி கற்பழிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளதாகவும், தற்போது தடய அறிவியல் சோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும்” போலீஸ் சூப்பிரண்டு கூறி உள்ளார்.


Next Story